ஓட்டுக்கு பணம் தர்றாங்க… கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரால் பரபரப்பு…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் சி விஜில் செயலி மற்றும் இலவச தொலைபேசி எண் மூலமாக தேர்தல் பிரிவு, கட்டுபாட்டு அறைக்கு புகார் 1950, 1800 425 0086, 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண் மூலமாக புகார் பெறப்பட்டு வருகிறது.

இதுவரை 260 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. நேற்று இரவு போத்தனூரில் இருந்து ஒரு நபர் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், வீட்டில் பணம் வைத்து, ஓட்டு போட சொல்லி தர்றாங்க, ஏகப்பட்ட பணம் இருக்கு, உடனே வாங்க என அழைத்தார்.

பறக்கும் படையினர், அந்த நபர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய லொக்கேசன் சென்று பார்த்தனர். அப்போது ஒரு நபர் மட்டும் தனியாக இருந்தார். அவரிடம் ஓட்டுக்கு பணம் தந்த விவகாரம் தொடர்பாக விசாரித்தனர். அந்த நபர் பணம் எதுவுமில்லை, நான் தப்பாக புகார் தந்து விட்டேன்,

என் புகாரை வாபஸ் பெறுகிறேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் எனக்கூறி புலம்பினார். அவரை எச்சரித்த அதிகாரிகள் அங்கேயிருந்து சென்று விட்டனர். ஆனால் போத்தனூரில் சில வீடுகளுக்கு இரவு நேரத்தில் ஓட்டுக்கு பணம் ரகசியமாக கொடுத்திருப்பதாக தெரியவந்தது.

சில நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறதாம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் பணம் கொடுப்பதாக தகவல் வெளியானது. இது தவிர, தேர்தலுக்கு முந்தைய நான் தனியாக பணம் வரும் எனவும் சொல்லியிருக்கிறார்களாம்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் கூறிய நபரை கட்சியினர் கண்டு பிடித்து விட்டார்களாம். தேர்தல் பறக்கும் படை வரும் முன்பே அவர்கள் அந்த நபரை பிடித்து மிரட்டியதாக தெரிகிறது. இந்த மிரட்டலுக்கு பயந்து அந்த நபர், தான் தப்பா நினைச்சு போன் பண்ணிட்டேன் எனக்கூறி நடித்து சமாளித்துள்ளார்.

நான் சொன்ன தகவல் எப்படி கட்சிக்காரங்களுக்கு போச்சு, நேர்மையாக யாரும் புகார் சொல்ல முடியாதா என அந்த நபர் புலம்பியதாக தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *