திமுகவிற்கு வெளிப்படையாக தபால் ஓட்டு: கோவை தெற்கு தொகுதியில் விதிமுறை மீறல்…!?
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் வரும் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது.
தற்போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு போடலாம். இதற்கான படிவம் பூர்த்தி செய்தவர்களுக்கு வீடு வீடாக சென்று தபால் ஓட்டு வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி மாவட்ட அளவில் 180 குழுக்கள் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் கொடுத்தவர்களின் வீடு தேடி சென்று தபால் ஓட்டு சீட்டுக்களை பெற்றனர். ஒட்டு போட்ட பின்னர் அந்த சீட்டை மடக்கி வைத்து தபால் கவரில் போட்டு ஒட்டி, அதை யாரும் பிரித்து பார்க்காத வகையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த தபாலை தேர்தல் பிரிவினர் பெட்டியில் போட்டு வாங்கி செல்வார்கள். இந்த நிகழ்வு அனைத்தும் தேர்தல் வீடியோ குழுவின் முன்பு பதிவு செய்யப்படும். நேற்று, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உரிய அம்மன் குளம் ஏரிமேடு பகுதியில் 85 வயது கடந்த மூதாட்டி ஒருவரின் வீட்டிற்கு தபால் ஓட்டு சேகரிப்பு குழு (டீம் 11) சென்றது.
அங்கே மூதாட்டியிடம் தபால் ஓட்டு பெற்றனர். அப்போது மூதாட்டி நீங்க சொன்னபடி நம்ம ஸ்டாலின் கட்சிக்கு தபால் ஓட்டு போட்டிருக்கேன், சரியா இருக்கான்னு பாத்துக்குங்க எனக்கூறினார். ஓட்டு போட்டதை வெளியே சொல்ல கூடாது என தெரிவித்த நிலையில், அதிகாரிகள் சொன்னது போல் ஒட்டு போட்டேன் என வீடியோ முன்பு மூதாட்டி கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த ஒட்டு சேகரிப்பு முறையாக நடக்கவில்லை, விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் முதல் ஓட்டு திமுகவிற்கு போடப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பொள்ளாச்சியில் 450 தபால் ஓட்டுக்கள், தொண்டாமுத்தூரில் 395 தபால் ஓட்டுக்கள், வால்பாறையில் 262 ஓட்டுக்கள் பெறப்பட்டது. மாவட்ட அளவில் 7583 மூத்த வாக்காளர்கள் 1692 மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் தபால் ஓட்டுக்கள் பெட்டியில் 3 நாளில் வாங்க தேர்தல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் பிரிவினர் தபால் ஓட்டுக்களை குறிப்பிட்ட கட்சியினருக்கு போட சொல்லி வாங்கி வருவதாக தகவல் பரவி வருகிறது. இதேபோல் தேர்தல் பணியில் உள்ள 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களிடமும் தபால் ஓட்டுக்களை குறிப்பிட்ட கட்சியினருக்கு போட வேண்டும் என்ற நிர்பந்தம் செய்தால் ஜனநாயக கடமை கேலிக்கூத்தாக மாறிவிடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
தேர்தல் கமிஷன் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடுநிலை வாக்காளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
