கோவையில் 80 லட்ச ரூபாய் மோசடி: இரண்டு பேருக்கு 10 ஆண்டு சிறை…!
ஈரோட்டை சேர்ந்தவர்ஸதர்மலிங்கம் (45). திருப்பூரை சேர்ந்தவர் கணேசன் (50). இவர்கள் இருவரும் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ் மற்றும் வெற்றி முருகன் சிட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் இவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கினர்.
இவர்களிடம் கோவையை சேர்ந்த முதலீட்டாளர்கள் உட்பட 130 பேரிடம் 80 .57 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரியின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 2016ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பின்னர் நிகழிடம் காரணமாக திருப்பூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கோவை டான்பிட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, நீதிபதி செந்தில்குமார் இன்று தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 93.80 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார்.
இந்த தொகையை இருவரும் இணைந்து செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொகையை பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
