ஓட்டு போட சொல்லி பணம் பட்டுவாடா… கோவையில் 24 வழக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் ஓட்டு போட சொல்லி பணம் தருவதாக புகார் பெறப்பட்டு வருகிறது.

தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிக புகார்கள் வந்துள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2 நாளில் ஓட்டு போட சொல்லி கட்சியினர் கொடுக்க வைத்திருந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 9 பேர் மீது போலீசில் புகார் தரப்பட்டு வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இது தவிர இன்று கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதியில் ஓட்டு போட சொல்லி பணம் கொடுத்த சிலரை பறக்கும் படையினர் பிடித்தனர். இவர்களிடம் ரூ.74 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் மீது போலீசில் புகார் தரப்பட்டிருக்கிறது. கடந்த 2 நாளில் பணம் பட்டுவாடா, டோக்கன், பரிசு பொருட்கள் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், ஓட்டுக்கு பணம் வழங்குவதாக பொய்யான புகார்களை கூறி தேர்தல் பறக்கும் படையினரை சிலர் அலைய வைத்துள்ளனர்.

மாவட்ட அளவில் நேற்று பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர், வருமான வரித்துறையினர் மூலமாக ரூ.2.01 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.1.89 கோடி மதிப்பிலான 15.91 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

முறையான ஆவணங்கள் இல்லை என இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது. தங்க நகை நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது. இந்த தங்கம் தேர்தல் பிரிவில் ஒப்படைக்கப்படவில்லை.

விசாரணைக்கு பிறகு ஜிஎஸ்டி ஆதாரங்களை காட்டி பெறலாம் என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். தேர்தல் பிரிவில், பொதுமக்கள் ஆதாரமின்றி கொண்டு சென்ற ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *