கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு 5 ஆயிரம்… தேர்தலை ரத்து செய்ய சொல்லி புகார்…!
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளில் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் தங்களுக்கு ஓட்டு போட சொல்லி வேட்பாளர்கள் சிலர் பணத்தை கொடுப்பதாக அதிகளவு புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது. ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் பல இடங்களில் வெளிப்படையாக பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் புகார் வந்துள்ளது.
மாவட்ட அளவில் கடந்த இரண்டு நாட்களில் அதிக அளவு தொகை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரு நாட்களில் மட்டும் பல நூறு கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தேர்தல் பிரிவினருக்கு ஏற்பட்டிருக்கிறது.
10 முதல் 20 வீட்டுக்கு ஒரு நபர் என்ற வகையில் பல்வேறு கட்சியினர் பிரித்து ஆட்களை அனுப்பி ஓட்டு போட சொல்லி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. மாவட்ட அளவில் பணம் கொடுத்த சில பகுதிகளில் தேர்தல் பிரிவினர் நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது சிலர் பணம் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்த நபர் மீது யாரும் புகார் தர முன்வரவில்லை. பல இடங்களில் பொதுமக்கள் தரப்பிலிருந்து பணம் கொடுத்தது தொடர்பாக புகார் வரவில்லை. சி விஜில், சுவிதா செயலி மற்றும் தேர்தல் கமிஷன் வெப்சைட் மூலமாக புகார் தர அழைப்பு விடப்பட்டிருந்தது. அதிலும் குறைவானவர்கள் மட்டுமே புகார் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் பல பகுதிகளில் பணம் பட்டுவாடா நடப்பதால் தேர்தல் பிரிவால் கண்டறிந்து தடுக்க முடியவில்லை. சில இடங்களில் பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் கட்சிக்காரர்கள் நடவடிக்கையை தடுக்காமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்வதை இன்னும் தொடர்கிறார்கள்.
பொதுமக்கள் சிலர் புகார் அளித்த பகுதிகளில் பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் தாமதமாக வருகிறார்கள். அதற்குள் பணம் பட்டுவாடா முடிந்து விடுகிறது. தேர்தல் பிரிவின் நடவடிக்கை தீவிரமாக இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மறுமலர்ச்சி மக்களை இயக்கத்தினர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இன்று பணம் பட்டுவாடா தொடர்பாக போராட்டம் நடத்தினர். அதில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் வாரி வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது நடக்கும் தேர்தல் நியாயமாக இல்லை.
ஜனநாயக ரீதியில் நடக்கும் தேர்தல் ஆக இது இருக்காது, எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியினர் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தது என்ற விவரங்களில் சேகரித்து விரிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
