அடையாளமின்றி அழிந்து போன நொய்யல் ஆறு…!
உக்கடம் ஆத்துப்பாலம் பகுதி நொய்யல் ஆறு…
கோவை மாவட்டத்தில் துவங்கும் நொய்யல் ஆறு 180.50 கி.மீ தூரம் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.
28 குளங்கள், 23 அணைக்கட்டு, 2 நீர் தேக்கம், 18,386 ஏக்கர் பாசன பரப்புக்கு நேரடி நீர் சப்ளை மற்றும் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மறைமுக பாசன உதவிக்கு இந்த ஆறு உதவியாக இருக்கிறது. நகரில் உள்ள 8 குளங்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஸ்மார்ட் சிட்டி இட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 200910 ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.
நீலி, புதுக்காடு சித்திரை சாவடி, குனியமுத்தூர், கோவை, குறிச்சி, வெள்ளலூர் சிங்காநல்லூர், ஓட்டர்பாளையம், இருகூர், சூலூர், ராசிபாளையம், மாதப்பூர், சாமளாபுரம் கருமத்தம்பட்டி, பள்ளபாளையம், செம்மாண்டம்பாளையம், மங்கலம், ஆண்டிப்பாளையம், மண்ணரை பாசன வாய்க்கால் 94 கி.மீ தூரத்திற்கு அமைந்துள்ளது .
இந்த பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு பணிகள் நடத்த வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிச்சி, வெள்ளலூர் ராஜ வாய்க்கால் சீரமைத்தும் பராமரிப்பின்றி புதர் குப்பைகளால் வீணாக கிடக்கிறது. மாவட்டத்தில் நொய்யல் மேற்கு பகுதியில் உள்ள நீலி, புதுக்காடு, உக்குளம், நரசாம்பதி கொலராம்பதி. இருகூர், சாமளாபுரம், செம்மாண்டம்பாளையம் குளம் உள்பட 15 குளங்களில் கடந்த ஆண்டு பருவ மழை ஓரளவு கூட கை கொடுக்கவில்லை.
கிழக்கு பகுதி குளங்களுக்கு குறிப்பாக திருப்பூர் வட்டார குளங்களுக்கு போதுமான அளவு மழை நீர் போய் சேரவில்லை. சில குளங்களில் 20 முதல் 30 சதவீத நீர் தேக்கம் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது. நகரின் மைய பகுதியில் உள்ள குளங்களில் சாக்கடை நீர் தேங்கியிருப்பதால் அசுத்தம் அதிகமாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.
மாவட்ட அளவில் நொய்யல் நீராதார பகுதி விளை நிலங்கள் வறட்சியில் இருக்கிறது. கிணறுகள். போர்வெல்லில் நீர் மட்டம் சரிந்து வருகிறது. தற்போதைய சூழலில் கோடை வெயில் உச்ச கட்டத்தில் இருக்கிறது. வறண்ட வானிலையால் விவசாயிகள் தவிப்படைந்துள்ளனர்.
அடுத்த மாதத்துடன் கோடை முடியும். அடுத்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீசன் மழை உரிய காலத்தில் வருமா, வராதா என்ற சந்தேகத்தில் பெரும்பாலான விவசாயிகள் இருக்கின்றனர். தொய்யல் ஆற்றின் பெரும்பகுதி முட்புகர், செடிகளால் முடங்கி போய் கிடக்கிறது.
நிலமட்டத்திற்கு இணையாக புதர் காடாக இருக்கும் நொய்யல் ஆற்றை அடையாளம் காண முடியாத அளவிற்கு இருக்கிறது. இதனை நீர் பாயும் வகையில் ஜேசிபி மூலமாக சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக புதர் அடைப்பை நீக்கினால் பருவ மழை காலத்தில் நீர் பாயும்.
இல்லாவிட்டால் சாக்கடையில் தான் மழைநீர் பாயும். எனவே ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் கூறுகையில், “கடந்த 2 ஆண்டிற்கு முன் நொய்யல் வாய்க்கால், தடுப்பணை ஷட்டர்கள் சீரமைக்கப்பட்டது. நொய்யல் மேற்கு, கிழக்கு பகுதி குளங்கள், வாய்க்கால்கள் தடுப்பணைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மழை நீர் பாயும் வகையில் நீர் பாதைகள், வாய்க்கால்கள் சரி செய்யப்படும். மழை பெய்தால் முழு அளவில் குளங்களுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும். எந்த இடத்திலும் குள வாய்க்காவில் அடைப்பு தடை இல்லை. மழை பெய்தால் தான் குளங்களின் நீர் மட்டம் உயரும், கோடை மழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து இருக்காது, தென் மேற்கு பருவ மழை பெய்தால் மட்டுமே நொய்யல் ஆற்றில் நீர் பாயும், என்றனர்.
