கோவையில் தற்கொலை செய்வதாக மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவி மாயம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கருகடம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்( 45).
இவரது மகள் தேவிகா (23). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஆபரேஷன் தியேட்டர் மற்றும் ஆனஸ்தீசியா டெக்னாலஜி படித்து வருகிறார்.
கோவை புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இவர் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார் . இந்த நிலையில் நேற்று இரவு இவர் தனது தந்தைக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில் நீங்கள் தாயை நல்ல முறையில் கவனிப்பதில்லை.
எனக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் செய்வது சரியில்லை. உங்களால் எனக்கு மன ரீதியான பாதிப்பு இருக்கிறது. நான் தற்கொலை செய்யப் போகிறேன் என அவர் அந்த மெசேஜில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பிறகு அவரது தந்தை பிரதீப் தேவிகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பதட்டம் அடைந்த அவர் கோவை வந்தார்.
மகளைத் தேடி அப்பார்ட்மெண்ட் சென்று பார்த்தபோது அங்கே அவர் இல்லை என தெரிய வந்தது. இது தொடர்பாக பிரதீப் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேவிகாவை தேடி வருகின்றனர்.
தேவிகா தனது தந்தைக்கு நள்ளிரவில் மெசேஜ் அனுப்பும்போது அவருடன் யாரும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் காலையில் அவர் தனது அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் அமிர்தா என்பவரிடம் பேசி உள்ளார். அவரிடம் தான் காந்திபுரம் துணி வாங்க செல்வதாகவும் விரைவில் வந்து விடுவேன் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். காணாமல் போன இளம்பெண்ணுக்கு காதல் இருப்பதாக தெரிகிறது. அவர் தனது காதல் விவகாரத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலிருந்து கடந்த சில மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக மாணவி காணாமல் சென்றிருக்கலாம் மாணவி நாடகம் நடத்தி ஏமாற்றி இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.தற்கொலை செய்யப் போவதாக மெசேஜ் அனுப்பி மாணவி மாயமான விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
