சிங்காநல்லூர் மேம்பாலம் பணிக்கு அடுத்த வாரம் டெண்டர் திறப்பு…
கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.
ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்கி டெண்டர் விட்டு பணியை துவக்க வில்லை. மேம்பாலம் 2.4 கி.மீ தூரத்திற்கு அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு துவக்கத்தில் நிதி ஒதுக்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பட்ஜெட் முடிந்தும் நிதி வரவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து தாமதம் செய்து வந்தது. 3 ஆண்டாக நிதி ஒதுக்காத நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தினால் திட்ட மதிப்பீடும் மாறி விட்டது. தற்போதைய சூழலில் திட்ட மதிப்பீடு 170 கோடி ரூபாய் என உத்தேசிக்கப்பட்டது.
ஆண்டுகள் ஆக ஆக திட்ட மதிப்பீடு தொடர்ந்து உயரும் நிலை இருக்கிறது. சிங்காநல்லூர் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்படுமா, தொடர்ந்து நிலுவையிலேயே இருக்குமா என பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கவலையில் காத்திருந்தனர். இந்த நிலையில், மத்திய அரசு மேம்பாலம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கியது. இந்த பணிக்காக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேம்பாலம் கட்ட கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி தொழில்நுட்ப தகுதிக்கான டெண்டர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த வாரம் திட்ட மதிப்பீடு தொடர்பான டெண்டர் திறக்கப்படவுள்ளது. இதில் ககுதி பெறும் ஒப்பந்த நிறுவனத்திற்கு பணி உத்தரவு வழங்கப்படவுள்ளது.
