37 ஆயிரம் தட்கல் மின் இணைப்பு என்னாச்சு…விவசாயிகள் ஏமாற்றம்
கோவையில் தமிழக விவசாயிகள் சங்க (சாதி, மதம், கட்சி சார்பற்ற) மாதாந்திர செயற்குழு கூட்டம் பேரூர் ஆறுமுக கவுண்டனூரில் நேற்று நடந்தது.
இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, துணை தலைவர் ரங்கநாதன், செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையினருக்கு, 234 எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்னைகளை விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திருத்தவும் ரத்து செய்யவும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் முயற்சி செய்வார்கள் என நம்புகிறோம். கடன் தள்ளுபடி சலுகை பாரபட்சம் இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
தட்கல் விரைவு விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விவசாயிகள் 10,000 விண்ணப்பங்களுக்கு உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என கடந்த ஆண்டு டிசம்பரில்
அறிவிப்பு வெளியிடப்பட்டது. 3 லட்ச ரூபாய் செலுத்திய விவசாயிகளுக்கு கூட மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியம் குளறுபடி செய்துள்ளது. கூடுதலாக 37500 விண்ணப்பங்களுக்கு ரூ.1450 கோடி வசூலித்து ஏமாற்றியது. எப்போது மின் இணைப்பு வழங்கப்படும் என்ற காலக்கெடு கூட அறிவிக்க மின்சார வாரியம் மறுக்கிறது.
எனவே தாமதம் இன்றி விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் அல்லது முன்னுரிமை பதிவேட்டில் பதிந்து கொண்டு அவர்கள் செலுத்திய தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
