அதிக வெப்ப தாக்குதல் பயிர் காக்க கோவை கலெக்டர் யோசனை…!

கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில், “

அதிக வெப்பநிலை காரணமாக மக்காசோளம், சோளம், நிலக்கடலை, எள், பயறு வகைகள் போன்ற வேளாண் பயிர்கள், மலர்கள் மற்றும் பழ பயிர்களில் மலர் உதிர்வு, காய்பிடிப்பு குறைவு, வெயில் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் தொழில் நுட்ப வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகின்றன. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்து முறைப்படி நீர்ப்பாசனம் மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ள வேண்டும். அதிக வெப்ப நேரங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி தொழிலாளர்கள் பண்ணை பணிகளை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் வெப்ப அலை காலத்தில் புதிய நடவு பணிகளை தவிர்க்க வேண்டும்.

நிலங்களில் கோடை உழவு மேற்கொண்டு எதிர் வரும் மழைநீரினை நிலத்தில் சேமித்து பயன் பெறலாம். நாற்றங்கால் மற்றும் காய்கறி பயிர்களில் வெப்ப தாக்கத்தை குறைக்க நிழல் வலை கூடாரம் அமைத்து சாகுபடி செய்யலாம்.

செடிகள் மற்றும் மரங்களின் அடிப்பகுதியில் உலர்ந்த இலைகள், தென்னை நார்க்கழிவு மற்றும் பாலீத்தின் தாள் ஆகியவைகளை கொண்டு மூடாக்கு அமைத்து மண் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம். அங்கக முறை சாகுபடியில் பயிர்கள் அதிக வறட்சியில் இருந்து பாதுகாக்கப் படுவதால் விவசாயிகள் அங்கக முறையில் சாகுபடி செய்யவேண்டும்.

நெல்லில் 3 சதவீத கயோலின் அல்லது 1% பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழியாகத் தெளிக்கலாம். பிபிஎஃஎம் எக்டருக்கு 500 மில்லி வீதத்தில் இலைவழியாகத் தெளிக்கலாம்.

பயறு வகைகளில் கலவையை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் இலைவழியாகத் தெளிக்கலாம். கரும்பில் 2.5% பொட்டாஷ் மற்றும் 2.5% யூரியா கலவையை இலைவழியாகத் தெளிக்கலாம். நீர் இழப்பைக் குறைக்க, 5% கயோலின் கரைசலை இலைவழியாகத் தெளிக்கலாம் மற்றும் மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்க கரும்புத் தோகை மூடாக்கு பயன்படுத்தலாம்.

நிலக்கடலையில் பூக்கள் உதிர்வதைக் குறைக்கவும். காய்கள் நன்கு திரளவும் நிலக்கடலை ரிச் இலை வழியாக தெளிக்கலாம். மண் ஈரப்பதத்தை பாதுகாக்க பாலித்தீன் படல் மூடாக்கு அமைக்கலாம். மக்காச்சோளத்தில் கதிர் பிடிக்கும் நிலையிலும் தானியங்கள் நிரம்பும் நிலையிலும், ஏக்கருக்கு 3 கிலோ என்ற அளவில் மக்காச்சோள மேக்சிம் 200 லிட்டர் நீரில் கலந்து இலைவழி தெளிப்பாகத் தெளித்து மகசூலைப்பெருக்கலாம்.

தக்காளியில் பூ உதிர்தலைக் கட்டுப்படுத்தவும். காய் பிடிப்பை மேம்படுத்தவும் டிரையாகோன்டனால் 1.25 ppm செறிவுள்ள (500 லிட்டர் தண்ணீரில் 625 மிலி) கரைசலை இலைவழியாகத் தெளிக்கலாம். இந்த ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், வெப்ப அலை தாக்கத்தால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைத்து. பயிர்களை பாதுகாத்து நிலையான விளைச்சலை உறுதி செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *