எஸ்.பி வேலுமணிக்கு பதிலாக செ.ம வேலுச்சாமி… மாவட்ட செயலாளராக அறிவித்த எடப்பாடி

அதிமுகவில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி வேலுமணி இருந்தார்.

இவரை கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிரடியாக நீக்கி அவருக்கு பதிலாக முன்னாள் அதிமுக அமைச்சரும், அமைப்பு செயலாளராக இருந்த செ.ம வேலுச்சாமியை நியமித்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பினர் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

தமிழக வெற்றி கழகத்திற்கு எஸ்.பி வேலுமணி தரப்பு ஆதரவு வழங்கிய நிலையில் கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்துள்ளார். அதே நேரத்தில் எஸ்.பி வேலுமணியின் கட்சி பதவியை அவரை நீண்ட காலம் எதிர்த்த செ.ம வேலுச்சாமி கொடுத்துள்ளார். கடந்த பல ஆண்டாக குறிப்பாக கோவை மாநகராட்சி மேயராக இருந்த செ.ம வேலுச்சாமியின் பதவி ஜெயலலிதா காலத்தில் பறிக்கப்பட்டது.

அதற்கு பின்னர் அவர் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஆனால் தொடர்ந்து அதிமுகவில் இருந்தார். மாற்று கட்சியில் அழைப்பு வந்தும் அவர் செல்ல மறுத்து விட்டார்.

அவருக்கு கடந்த தேர்தலில் சூலூர் தொகுதியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எஸ்.பி வேலுமணி தடுத்து விட்டதாக தகவல் வெளியானது. கோவை மாவட்டத்தில் எந்த பகுதியிலும் செ.ம வேலுச்சாமி கட்சி பணி செய்ய எஸ்.பி வேலுமணி அனுமதிக்கவில்லை.

செ.ம வேலுச்சாமி மேயராக இருந்த போது மாநகராட்சி மன்ற கூட்டம் நடந்தது. அப்போது புதிதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பதவி பெற்ற எஸ்.பி வேலுமணி கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு வந்தார். என்னிடம் கேட்காமல் என் அனுமதியின்றி எப்படி கூட்டத்திற்கு வரலாம் என அதிரடியாக மன்ற கூட்டத்தில் செ.ம வேலுச்சாமி கேட்டார்.

அவரை வெளியே போக சொல்லி விட்டார். இந்த மோதல் தீரா பகையானது. இப்போது கோவை மாவட்டத்தில் மட்டுமல்ல கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்திலும் எஸ்.பி வேலுமணி செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார். அவரை காலி செய்ய மாற்றாக அதே அளவு செல்வாக்கு, பேச்சு திறன், அதிரடி செயல்பாடு கொண்டவர் தேவை என எடப்பாடி பழனிச்சாமி, செ.ம வேலுச்சாமியை களம் இறக்கியுள்ளதாக பேச்சு பரவலாக இருக்கிறது.

எதிரும், புதிருமான செ.ம வேலுச்சாமி, எஸ்.பி வேலுமணியின் கோவையில் இனி எப்படி இருக்கும் என கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *