பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏஐ பாடத்திட்டம் அறிமுகம்…

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ஆக்னடிக் செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) போன்ற தொழில்நுட்பங்களை கொண்ட பாடங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலையில் 40 துறைகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் உட்பட 147 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரிகளில் இளங்கலை, முதுகலையில் பல்வேறு பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப |திறன்களை பெறும் வகையில், சிறப்பு கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் சார்ந்த கல்வி ஆகியவற்றில் பல்கலைக்கழகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

ஏற்கனவே, பல்வேறு பாடப்பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஆக்னடிக் ஏஐ, ஆக்மென்டட் ரியாலிட்டி(ஏ.ஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி(வி.ஆர்) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களும் பாடத்திட்டங்களில் இணைக்கப்படுகின்றன.

அதன்படி, இந்த புதிய தொழில்நுட்பங்கள் பல்கலையின் மேலாண்மை, வணிகவியல், கணினிப் பயன்பாடுகள் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கொண்டுவரப்படுகிறது. மேலும், பல்துறை சார்ந்த களங்களிலும் அவை பயன்படுத்தப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் டிஜிட்டல் மாற்றம், அறிவார்ந்த அமைப்புகள், வணிக பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட கணினித்துறைகளில் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி பெறுவார்கள். தவிர, புத்தாக்கம், தொழில்முனைவு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளின் வளர்ச்சிக்கும் இது ஊக்கமளிக்கும்.

உயர்கல்வித் தரத்தை மேம்படுத்தி, உலகளாவிய கல்வி மற்றும் தொழில்துறை போக்குகளுக்கு ஏற்ப மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களுடன் உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *