கனமழையால் கோவை ஏர்போர்ட் காம்பவுண்ட் இடிந்தது: விமான சேவை ரத்து
கோவை விமான நிலையம் பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது.
இந்த வளாகம் 16,400 சதுர மீட்டர் பரப்பில் இருக்கிறது, 24 செக் இன் கவுண்டர்கள், 12 குடிவரவு கவுண்டர்கள், 6 செக்யூரிட்டி பகுதி வழியாக சோதனை நடக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் இங்கேயிருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
விமான நிலைய வளாகம் முழுவதும் 12 அடி உயரத்திற்கு மேல் காம்பவுண்ட் சுவர் அமைத்து பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ரன்வே பகுதியிலிருந்து சில மீட்டர் தூரத்தில் இருந்த சுற்றுச்சுவர் இரண்டு இடத்தில் இடிந்து விழுந்தது.
இதை தொடர்ந்து அங்கே பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக புகார் தரப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அங்கே குவிக்கப்பட்டனர். கருங்கல் சுற்றுச்சுவர் இடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விமான நிலைய ஆணையம், பாதுகாப்பு வசதி செய்யும் வரை விமான சேவை தொடர தடை விதித்தது.
இதன் காரணமாக கோவைக்கு வரவேண்டிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக சென்னையிலிருந்து கோவைக்கும். கோவையிவிருந்து சென்னைக்கும் விமான சேவை தாமதம் செய்யப்பட்டது. 3 விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு வர வேண்டிய விமானங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர், அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்காலிக ஏற்பாடாக பேரி கார்டு வைக்கப்பட்டது. இன்று சுற்றுச்சுவர் கட்டப்படும்.
அதுவரை போலீசார் கண்காணிப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விமான சேவைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை விமானங்கள் இயக்கப்படாமல் திருப்பி விடப்பட்டதாலும், தாமதம் ஆனதாலும் பயணிகள் தவிப்படைந்தனர்.
