கோவையில் தேர்தல் காலத்தில் 834 புகார் மனுக்கள் குவிப்பு

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் மாவட்ட அளவில் குறை தீர்ப்பு முகாம்கள் மூலமாக 17,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டது.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் மார்ச், ஏப்ரல் மாதங்களில் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெறுவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. இந்த பெட்டியில் தேர்தல் காலத்தில் மட்டும் 834 புகார் மனுக்கள் பெறப்பட்டது. இதில் வருவாய் துறை மூலமாக 549 மனுக்கள், வேலைவாய்ப்பு துறையில் 12 மனுக்கள், வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் 104 மனுக்கள், இதர துறைகளில் 171 மனுக்கள் பெறப்பட்டது.

பெட்டி திறக்கப்பட்டு அந்தந்த துறைகளுக்கு புகார் மனுக்கள் முறையாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. வருவாய்த்துறை, மின்வாரியம். பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றுமின்றி மாவட்ட மற்றும் மாநகரப் போலீஸ் தொடர்பாக புகார் மனுக்கள் அதிகமாகி வருகிறது.

போலீசில் வழங்கப்பட்ட புகார் மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணப்படவில்லை போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதிகளவு புகார் மனுக்கள் வந்து கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக கோவை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் புகார் மனுக்கள் பெறப்பட்டு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகார்தாரர்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரம் தீர்வு காணப்பட்ட தகவல் உடனடியாக தெரிவிக்கப்படுகிறது.

. 15 நாட்களுக்கு மேலாக நிலுவையில் புகார் மனுக்கள் வைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் தான் இந்த மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும். நாங்கள் புகார் மனுக்களை முறையாக அனுப்பி வைத்து விடுவோம். தான் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என இரண்டாவது முறை மனு கொடுத்தால் அதை கண்டுபிடிக்க இங்கே வசதி கிடையாது.

முதல்வரின் முகவரிக்கு ஆன்லைன் மூலமாகவும் புகார் மனுக்களை பொதுமக்கள் அனுப்பி வைத்து வருகிறார்கள். சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் புகார் மனுக்கள் திரும்ப எங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த மனுவை நாங்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்து தகவல் தெரிவிக்கிறோம்.

மாவட்ட அளவில் பெரும்பாலான புகார் மனுகளுக்கு தீர்வு காணப்பட்டது. வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை கேட்டு அதிகளவு புகார் மனுக்கள் வருகிறது. ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *