கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி வேன் டிரைவர் கைது…!
கோவையை சேர்ந்த 6 வயதான சிறுமி, தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததால், தாயார் சிறுமியை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அந்த சிறுமியின் தாயார் கோவை வந்தார். பின்னர் அவர் தனது மகளை தன்னுடன் பெங்களூருவுக்கு அழைத்துச்சென்றார். அவர் தனது மகளை கவனித்தபோது அவர் மிகவும் சோர்வுடன் இருந்தார்.
உடனே அவர் தனது மகளிடம் ஏன் சோர்வாக இருக்கிறாய் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் உடல் வலிக்கிறது என்று கூறி உள்ளார். இதையடுத்து அவர் தனது மகளை பரிசோதித்தபோது காயம் இருந்ததை கண்டுபிடித்தார்.அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகளிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்று கேட்டார்.
அதற்கு அவர் பள்ளி முடிந்ததும் நான், முதல் ஆளாக வேனுக்கு வந்துவிடுவேன். அப்போது அந்த வேனில் இருக்கும் டிரைவர் எனக்கு சாக்லேட் கொடுத்துவிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக அழுதுகொண்டே கூறினார்.
உடனே அவர் தனது மகளை பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார். இது குறித்து கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளிக்கூட வேன் டிரைவர் கணேசன் ( 43) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
