கோவையில் கிரிப்டோ கரன்சி முதலீடு என ரூ. 29 லட்ச ரூபாய் மோசடி…
கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்த 45 வயதான தொழில் நிறுவனம் நடத்தி வரும் நபர் ஒருவருக்கு சில மாதம் முன்பு மெசஞ்சர் மூலமாக ஒரு தகவல் வந்தது.
அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் விரைவாக அதிக பணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மெசஞ்சர் மூலமாக பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார் . அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்கு பிரத்யேகமான ஒரு செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதன்படி செயலியை டவுன்லோட் செய்ய வைத்து அதிலிருந்து பல்வேறு விவரங்களை வங்கி கணக்கு விவரங்களை வாங்கினார்.
மேலும் 17 தவணைகளில் 29 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகை பெற்றார். ஆனால் முதிர்வு தொகை, வட்டி எதுவும் வழங்கப்படவில்லை. செயலி மூலமாக எவ்வளவு தொகை உயர்ந்து வருகிறது என அவர் காட்டினார். சந்தேகமடைந்த தொழில் நிறுவன உரிமையாளர் அந்த பெண்ணிடம் கேட்டபோது அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
மேலும் அவரை அதற்குப் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை . இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த கிரிப்டோ கரன்சி கும்பலை தேடி வருகின்றனர்.
