போலீஸ் விசாரணை எப்படி இருக்கு… கோவை கலெக்டர் ஆய்வு
கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள், சட்ட விரோத செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.
மக்கள் போலீஸ் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்து கலெக்டரிடம் அதிரடியாக புகார் கூறி வருகிறார்கள். குறிப்பாக இட பிரச்னையில் போலீசார் அத்துமீறி செயல்படுகிறார்கள். சிவில் விவகாரத்தில் தலையிட கூடாது என உத்தரவு இருந்தாலும் அதை சட்டம் ஒழுங்கு பிரச்னை, தகராறு, மோதல் விவகாரம் என மாற்றி விசாரிக்க அழைத்து போலீசார் அத்து மீறி வருவதாக தெரிகிறது.
மேலும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால் சிஎஸ்.ஆர் என்ற புகார் மனு ஏற்பு ரசீது கூட வழங்குவதில்லை. என குறைபாடு இருக்கிறது. புதிய ஆட்சிக்கு வந்த பின்னர் போலீஸ் செயல்பாடு அதிருப்திகரமாக மாறி விட்டதாகவும் அதை சரி செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை நகர், புறநகர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, குற்ற நடவடிக்கை தொடர்வாக வாரந்தோறும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. கோவையில் இரண்டாவது வாரமாக கலெக்டர் பவன் குமார் தலைமையில் இன்று ஆய்வு நடந்தது.
இதில் மாநகர், மாவட்ட உளவுப்பிரிவு போலீசார், தனிப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் பங்கேற்றனர். இதில் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள போலீஸ் தொடர்பான புகார் மனுக்கள், சிஎஸ்ஆர், பாலியல் அத்துமீறல், குடும்ப வன்முறை விவகாரம் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது.
டாஸ்மாக் மக்களை மிரட்டும் நபர்கள், ரவுடிகள் திருட்டு, வன்முறை செயல்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. போலீசார் இன்னும் அலட்சியமாக இருக்காமல் துரிதமாக செயல்பட மாவட்ட கலெக்டர் உத்தரவு வழங்கியுள்ளார்.
