கோவை மாநகராட்சி பள்ளிகளில் அட்மிஷன் மறுப்பதாக புகார்…
கோவை மாநகராட்சியில் 84 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிகளில் கடந்த ஆண்டு விட நடப்பு கல்வியாண்டில் கூடுதல் மாணவ மாணவிகளை சேர்க்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு வழங்கியது. ஆனால் சில பள்ளி நிர்வாகங்கள் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்துவதில்லை.
மாறாக மாணவர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீவிரம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஒப்பணக்கார வீதியில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2000 மாணவிகள் கல்வி கற்று வந்தனர். இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவிகள் சேர்க்கை 500 முதல் 600 வரை குறைந்துள்ளது.
நடப்பாண்டிலும் இந்த பள்ளியில் வழக்கமான அளவிற்கு கூட மாணவிகள் சேர்க்கை நடத்தப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்று புறநகரில் இருந்து இந்த பள்ளியில் படிக்க சீட் கேட்டு வந்த மாணவிகளை கூட்டம் கூட்டமாக திருப்பி அனுப்பி வருவதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளிகளில் கூடுதல் வசதிகள் செய்ய முடியவில்லை. அதிக மாணவிகள் பள்ளியில் சேர்ந்தால் அவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் செய்து தர வேண்டும். மேலும் அதிக மாணவிகள் இருந்தால் ஆசிரியர்கள் கூடுதல் கவனத்துடன் பாடம் கற்றுத் தர வேண்டியிருக்கும்.
பணி சுமை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே மாணவிகள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த பள்ளி மட்டுமல்ல மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இதே நிலைமைதான் இருக்கிறது.
அட்மிஷன் போட மறுத்து மாணவ மாணவிகளை திருப்பி அனுப்பும் செயலால் ஏழை பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிக மதிப்பெண் பெற்றுள்ளவர்கள் தகுதியானவர்களுக்கு அவர்கள் கேட்கும் பாட பிரிவை வழங்கவும் மாநகராட்சி பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. சில மாநகராட்சி பள்ளி நிர்வாகிகள் அருகே உள்ள தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
தனியார் பள்ளிகளில் அட்மிஷன் முடிக்கும் வரை குறிப்பிட்ட பாட பிரிவுகள் நிரம்பி விட்டது. வேறு பாடப்பிரிவுகள் தான் இருக்கிறது. அதுவும் தற்போதைய இடங்கள் நிரம்பி விட்டது எனக் கூறிய தட்டி கழித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக மாநகராட்சி பள்ளி நிர்வாகத்தினர் செயல்பட்டு வரும் விவகாரம் பெற்றோர் மத்தியில் குறிப்பாக ஏழை எளியவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் விசாரித்து உரிய முறையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது இந்த விபரம் தொடர்பாக விசாரிக்கிறேன் என்றார்.
