தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி சப்ளை நிறுத்தம்…!

தமிழகத்தில் 39 மாவட்டங்களில், 268 ரேஷன் கிடங்குகள் இருக்கிறது.

மாநில அளவில் 34,916 ரேஷன் கடைகள் இருக்கிறது. இந்த கடைகளின் மூலமாக 2.28 கோடி ரேஷன் கார்டுகளின் மூலமாக 7.01 கோடி குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற்று வருகின்றனர். நபருக்கு 5 கிலோ வீதம் ரேஷன் அரிசி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது.

சாதாரண ரேஷன் அரிசியில் போதுமான சத்து இருப்பதில்லை. அதில் செறிவூட்டப்பட்ட அரிசி சேர்த்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்த செறிவூட்பட்ட அரிசி என்பது அரிசி மாவு அல்லது சோள மாவில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற தாதுக்கள் சேர்க்கப்படும்.

இந்த அரிசியும் மற்ற அரிசி தோற்றத்தில் இருக்கும் செயற்கை அரிசி ஆகும். 1 கிலோ ரேஷன் அரிசியில் 10 கிராம் எடையில் இந்த செறிவூட்டபட்ட அரிசி கலந்து வாணிப கழகம் மூலமாக ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது. ரத்த சோகை, உடல் சோர்வு, ஊட்டசத்து குறைபாட்டை தடுக்க இந்த செறிவூட்டப்பட்ட அரிசி பயன் தரும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டாக ஒன்றிய அரசு இந்த அரிசியை சப்ளை செய்து வந்தது. இதற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த அரிசி சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருப்பில் இருந்த செறிவூட்டப்பட்ட அரிசி சில கடைகளுக்கு கடந்த மாதம் வழங்கப்பட்டது. தற்போது எந்த கிடங்கிலும் செறிவூட்டப்பட்ட அரிசி கிடையாது.

இது தொடர்பாக கோவை நுகர் பொருள் வாணிப கழக முது நிலை மேலாளர் பழனி குமார் கூறியதாவது

கான்பூர் உள்பட பல்வேறு பல்கலைகழகத்தினர் ஆய்வு நடத்தியதில் 10 நாளில், செறிவூட்டபட்ட அரிசியில் உள்ள தாதுப்பொருட்கள் பயன்தராமல் போய் விடுவதாக தெரியவந்தது. இந்த சத்துக்கள் மக்களுக்கு சேராத நிலையில் இதை ஏன் இன்னும் அமல்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

அதிக செலவினம் கருதியும் இந்த திட்டம் வேண்டாம் என மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனை வேறு வடிவில் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். வைட்டமின் பி 12, போலிக் அமிலம் போன்ற சத்துக்களை நெற்பயிர் வளரும் போது கலந்து உருவாக்கி அதை இயற்கை நெல் மூலமாக பெற வேண்டும்.

அப்படி அரிசியில் இருந்து இயல்பாக அரிசியில் வரும் சத்துக்கள் பயன்தரும் என சொல்லியிருக்கிறார்கள். அப்படி எப்படி தாதுப்பொருட்கள் அரிசி தயாரிக்க போகிறார்கள் என தெரியவில்லை. நாங்கள் கடந்த காலங்களில் சாதா ரேஷன் அரிசி, செறிவூட்டபட்ட அரிசி என இரு வகையான அரிசி சப்ளை செய்து வந்தோம்.

இதற்கு தனி ரேஷன் வாகனமும் பயன்படுத்தப்பட்டது. சாதா அரிசி 40 சதவீதம், செறிவூட்டபட்ட அரிசி 60 சதவீதம் வழங்கப்பட்டது. இதற்கான தனி நடைமுறை பின்பற்றப்பட்டது. இந்த மாதம் முதல் அந்த நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *