மாணவர் கழுத்தில் கத்தி வைத்து பணம் செல்போன் பறிப்பு…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பொதுவார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகன் கதிர் (20). இவர் கோவையில் பி.டெக்., ஐடி 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 5ம் தேதி மாலை கதிர் குனியமுத்தூர் பெருமாள்சாமி நகரில் உள்ள தனது நண்பன் சுரேஷ் என்பவரின் அறைக்குச் சென்றிருந்தார். அப்போது, கதிருக்கு ஏற்கனவே அறிமுகமான 4 பேர் திடீரென அறைக்குள் அத்துமீறி புகுந்தனர். அவர்கள் கதிரை தகாத வார்த்தைகளால் திட்டி, முட்டி போடுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு கதிர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த, அக்கும்பல் கதிரை சரமாறியாகத் தாக்கியுள்ளது. பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அதற்கு கதிர் தன்னிடம் பணம் இல்லை என்றுள்ளார். அந்த கும்பலில் ஒருவர் கதிரின் கழுத்தில் கத்தியை வைத்து, பணம் தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். அதற்கு பயந்து போன கதிர் தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.47 ஆயிரத்தை அக்கும்பலுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், அவர்கள், கதிர் அணிந்திருந்த ஒரு வெள்ளிச் செயின் மற்றும் அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கதிர் குனியமுத்தூர் போலீசில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அறைக்குள் புகுந்து பணம் பறித்த 4 பேரின் பெயர்கள் ரிஸ்வான், சாதிக், ஜெகநாத் மற்றும் அபுஷ் என்பது மட்டும் தெரியும் மற்ற விவரங்கள் தெரியவில்லை என்று கதிர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவர்கள் யார் என விசாரித்து தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர் அறையில் புகுந்து கத்திமுனையில் கொள்ளையடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
