குருமாவில் பல்லி: கோவை ஓட்டலுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம்…
கோவை
கோவை மைல்கல்லை சேர்ந்த பத்ருதீன் நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை பீளமேடு பிராட்வே சாலையில் உள்ள உணவகத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி சாப்பிட சென்றேன். பரோட்டா மற்றும் குருமா ஆர்டர் செய்து ரூ.200 செலுத்தினேன். பின்னர் உணவு சாப்பிட்டேன். அந்தகுருமாவில் இறந்த பல்லி கிடந்தது. உடனே உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டு, எனது குடும்ப உறுப்பினர்களையும் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறினேன்.
குருமாவில் கிடந்த பல்லியை செல்போனில் படம் பிடித்தேன். உணவக ஊழியர்களிடம் இது குறித்து கூறியபோது உரிய விளக்கமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. இந்த உணவை உட்கொண்டதால் மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றேன்.
ஆட்டோ ஓட்டுநரான எனக்கு, மருத்துவ செலவுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. வயிற்று போக்கு ஏற்பட்டதால் பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்தேன். ஒரு வாரம் ஆட்டோ ஓட்ட முடியாததால் வருமான இழப்பும் ஏற்பட்டது. மருத்துவச் செலவு வழங்குமாறு உணவக நிர்வாகத்திடம் போனில் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
எனவே உரிய நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி தட்சணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், தனியார் உணவக நிர்வாகம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்ற செலவாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
