கோவை பைபாஸ் ரோட்டில் டேங்கர் லாரியில் பெட்ரோல், டீசல் திருடும் கும்பல்…

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் சரக்கு வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கிறது.

இங்கே பாரத் பெட்ரோல், இந்தியன் ஆயில் நிறுவன பிளான்ட் இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் பைபாஸ் ரோட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஓரங்கட்டி நிறுத்துவதும். அதில் நூதனமாக பெட்ரோல், டீசல் திருடுவதும் சுடந்த சில ஆண்டாக நடக்கிறது.

குறிப்பாக போடிபாளையம் பிரிவில் டீக்கடைகளை ஒட்டி அதிகளவு பெட்ரோல், டீசல் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. தினமும் இங்கே பேரல், பேரலாக டீசல், பெட்ரோல் உறிஞ்சி திருடுகிறார்கள். இந்த கொள்ளையின் பின்னணியில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு மாஸ்டர் பிளான் போட்டு செயல்படுத்துவது டெய்லர் என அழைக்கப்படும் நபர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கும்பலுக்கான உதவிகளை போலீஸ் வட்டாரத்தில் சிலர் மறைமுகமாக செய்து தருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தினமும் பல லட்ச ரூபாய்க்கு டீசல், பெட்ரோல் திருட்டு நடந்த போதிலும் இதில் எவ்வித புகாரும் பெறப்படவில்லை. மதுக்கரை, செட்டிபாளையம், கந்தே கவுண்டன் சாவடி, சூலூர் போலீசாருக்கு தெரிந்தே பைபாஸ் ரோட்டில் இந்த சட்ட விரோத செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த விவகாரம் வெளிவட்டாரத்திற்கு தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் பேட்டரி, ஸ்கிராப் திருட்டு என ஒரிரு வழக்குகள் மட்டுமே பெயரளவிற்கு பதிவானது. இந்த குற்றவாளிகளை போலீசார் காப்பாற்றி பல கோடி ரூபாய் சுருட்டும் அளவிற்கு வளர்த்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயில் திருட்டு தொடர்பாக இதுவரை பைபாஸ் ரோட்டில் இருகூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களில் எந்த விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பங்குகளுக்கு செல்லும் டேங்கர் வெளி மாநிலத்திற்கு செல்லும் லாரிகளில் இந்த திருட்டு நடக்கிறது.

டேங்கர்களில், டியூப் போட்டு பெட்ரோல், டீசல் எடுக்கிறார்கள். டேங்கரில் உள்ள ஆயில் அளவை இரும்பு ஸ்கேல் கொண்டு அளப்பார்கள். அப்போது மட்டம் சரியாக இருக்கும் வகையில் மேடு உள்ள இடத்தில் வைத்து அளப்பார்களாம். ஆயில் நிறுவனங்கள், லாரி டிரைவர்கள், ஆயில் வாங்குவோர், சப்ளையர் என இதில் பல தரப்பு நபர்களுக்கும் தொகை பங்கு போகிறதாம்.

திருட்டு தனமாக எடுக்கப்படும் பெட்ரோல், டீசல் வாங்க கடும் போட்டி நிலவுகிறது. ஆயில் வகைகள் மட்டுமின்றி பேரல்களில் இருந்து நூதனமாக தார் திருட்டும் நடக்கிறது. ஸ்கிராப், பல்வேறு வகையான உதிரிபாகங்கள் என லாரிகளை ரோட்ரோம் நிறுத்தி திருட்டு தொழில் கும்பல் கைவரிசை காட்டி வருகிறது.

திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் பைபாஸ் ரோடு, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சேமிப்பு குடோன்களும் அமைத்திருப்பதாக தெரிகிறது. இந்த நூதன திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோட்டார் தொழிலில் இருப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *