ஜிடி நாயுடு மேம்பாலத்தில் அபராதமா…? பொய் ரீல்ஸ் அதிகரிப்பால் பரபரப்பு

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
1791 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.
இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை .
மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில் வீலிங் , பயர் டிரைவிங் போன்ற சாகசத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. அதி வேகமாக வாகனங்கள் செல்வதும் போக்குவரத்து விதிமுறை மீறல் நடப்பதும் அடிக்கடி அதிகமாகி விட்டது.
இதை தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் பிரிவு சார்பில் கண்காணிப்பு கண்காணிப்பு கேமரா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது . 3 கோடி ரூபாய் செலவில் இந்த கேமரா அமைக்கப்பட்டது.
மேம்பாலம் சந்திப்பு பகுதிகளான கோல்டு வின்ஸ் மற்றும் உப்பிலிபாளையம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.
இது தவிர அண்ணா சிலை, நவ இந்தியா ,பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரி, ஹோப் காலேஜ் , கொடிசியா என எட்டு இடங்களில் உள்ள ஏறு இறங்கு தளங்கள் அபாய வளைவுகள் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 44 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கேமராக்களில் தினமும் காட்சி பதிவுகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. வாகனங்கள் விதிமுறை மீறல் தொடர்பாக டிஸ்ப்ளே பகுதியில் காண்பிக்கப்படுகிறது ஆனால் இதுவரை எந்த வாகனத்திற்கும் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால் சோசியல் மீடியாக்களில் அபராதம் விதிக்கப்பட்ட போது போல் பொய்யான ரீல்ஸ் மற்றும் பதிவுகள் வெளியாகி வருகிறது.
ஆமாம் எனக்கும் பைன் போட்டு இருக்கிறார்கள் என சிலர் அந்த பொய் வீடியோக்களுக்கும் ஜால்ரா போட்டு வருகிறார்கள். தொடர்ச்சியாக இந்த வதந்தி அதிகமாகி வருகிறது.
இது தொடர்பாக கோவை கோட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் பிரிவு கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி கூறியதாவது
பீளமேடு பி எஸ் ஜி டெக் அருகே ஒரு கண்டெய்னர் வைக்கப்பட்டுள்ளது இந்த கண்டெய்னர் தான் மொத்த ஏஐ கேமராக்களுக்கான கண்ட்ரோல் ரூம். இதில் தினமும் பெறப்படும் காட்சி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விதிமுறை மீறல் இருந்தாலும் ஃபைன் போடப்படவில்லை. இந்த மொத்த கேமராக்களும் பெங்களூரில் உள்ள கிளவுட் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த கேமராக்கள் அனைத்தும் போக்குவரத்து துறையில் வாகன் சாப்ட்வேர் உடன் இணைக்கப்படும். அதற்குப் பிறகுதான் பைன் போடப்படும். தினமும் சுமார் 60 ஆயிரம் வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதில் அதிக அளவு கார்கள் விதிமுறை மீறி இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் பத்து சதவீதம் வாகனங்கள் அதிகளவு விதிமுறை மீறலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அபராதம் தொடர்பாக டிஸ்ப்ளே தகவல் வெளியானதால் பலர் பயந்து கொண்டு வாகனங்களின் வேகத்தை குறைத்தும் சீட் பெல்ட் அணிந்தும் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். வரும் காலங்களில் வாகன விதிமுறை மீறல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு வாரங்களில் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேரடியாக அபராதம் விதிக்கப்பட மாட்டாது வாகன் மூலமாக விதிமுறை மீறல் தொடர்பான லிங்க் அனுப்பி வைக்கப்பட்டு அதில் அபராத தொகை வசூலிக்கப்படும்.
