கோவையில் சிறை கைதி போலீஸில் இருந்து தப்பி ஓட்டம்…

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (34).

இவர் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி திருப்பூரில் நடந்த அடிதடி தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக திருப்பூர் போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. நடக்க முடியாத சூழல் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் கழிவறை செல்ல வேண்டும் என அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டார்.

அப்போது அவர்கள் பாத்ரூம் செல்வதற்கு அனுமதி வழங்கினர். நடக்க முடியாமல் தள்ளாடியபடி மெதுவாக அவர் சுவற்றை பிடித்துக் கொண்டு கழிவறை நோக்கி சென்றார். பல நிமிட நேரமாகியும் அவர் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது பிம்முடு அஜித்குமார் ஆண்கள் கழிவறையில் இருந்து இரும்பு தடுப்புகளை வளைத்து நெளித்து அருகே இருந்த பெண்கள் கழிவறைக்குள் புகுத்திருந்தார். அங்கே இருந்த சுவற்றின் மீது ஏறி கீழே குதித்து தப்பி சென்றதாகவும், குதிக்க வசதியாக பக்கத்திலிருந்த கண்ணாடிகளை கையால் உடைத்து விட்டதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கோவை அரசு மருத்துவமனை வட்டாரத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்த்தனர். அப்போது அஜித்குமார் பெண்கள் கழிவறையில் பகுதியில் இருந்து கீழே குதித்து அங்கே இருந்து அவர் வேகமாக நடந்து மெயின் கேட் வழியாக ரயில்வே ஸ்டேஷன் நோக்கி சென்றது தெரியவந்தது.

அவர் ரயில் மூலமாக கர்நாடக மாநிலம் அல்லது வேறு பகுதிக்கு தப்பி சென்று இருக்கலாம் என தெரிகிறது. கோவை போலீசார் அஜித் குமார் போட்டோவை அனுப்பி திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி ரயில் நிலையங்களில் ரயில்களில் தேடி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் பணி நடக்கிறது.

இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி அதிரடியாக தப்பி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை கைதிகள் வார்டு பாதுகாப்பு இல்லாத நிலைமையில் இருப்பதாக தெரிகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் செல்வராஜ் என்பவர் உடல் நலம் சரியில்லை என கைதிகள் வார்டில் சேர்க்கப்பட்டு கழிவறைக்கு சென்று தாவி குதித்து தப்பி சென்றார். அவரை இதுவரை பிடிக்கவில்லை.

அவர் தனது மனைவி ஏமாற்றி விட்டார் அவரை பழிவாங்க போகிறேன் என போலீசாரிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். அவர் தப்பி சென்றதிலிருந்து போலீசாரால் அவரை தேடிப் பிடிக்க முடியவில்லை. மாற்று திறனாளி கைதி ஒருவரும் இதேபோல் கழிவறை செல்வதாக கூறி போலீசில் இருந்து தப்பினார். கழிவறைக்கு செல்வதாக கூறி கைதிகள் தப்புவது தொடர்ந்து பாதுகாப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் கோட்டை விடுவது வாடிக்கையாக இருக்கிறது.

இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பணியில் இருந்த 2 போலீஸ்காரர் மீது விசாரணை நடக்கிறது, விரைவில் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *