Drugs ride: 3 நாளில் 2058 குட்கா, 30 கிலோ கஞ்சா 90 குற்றவாளிகள் கைது…

கோவை மாநகரில் கடந்த 3 நாட்களில் அறைகள், விடுதிகளில் போலீசார் சிறப்பு சோதனை நடத்தி 90 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2058 கிலோ குட்கா, 30 கிலோ கஞ்சா உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் 400க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசார் சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், வடவள்ளி, ஆர்எஸ் புரம் ரேஸ்கோர்ஸ், கோவைபுதூர், போத்தனூர், பீளமேடு உட்பட பல்வேறு இடங்களில் மாணவர்கள் அறை, தங்கும் விடுதி, வெளி மாநில, மாவட்ட நபர்கள் தங்கி உள்ள அறைகள், பார்சல் சர்வீஸ் என 300க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர் சிறப்பு சோதனை நடத்தினர்.

இதில், முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (3ம் தேதி) போலீசார் 758 கிலோ 482 கிராம் குட்கா, 3 கிலோ 100 கிராம் கஞ்சா, 100 போதை மாத்திரை, 1230 ஊசி, 23 மது பாட்டில், 4 செல்போன், ரூ.50 ஆயிரத்து 500 ரொக்கம், ஆவணங்கள் இல்லாத ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல பிடிவாரண்ட் குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறுநாள் சனிக்கிழமை 1275 கிலோ 840 கிராம் குட்கா, 7 கிலோ 20 கிராம் கஞ்சா, 36 கஞ்சா சாக்லேட், 108 போதை மாத்திரை, 5 ஊசி, 1 செல்போன், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து 24 வழக்கு பதிவு செய்தனர். அதில் 30 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிவாரண்ட் குற்றவாளிகள் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 23 கிலோ 750 கிராம் குட்கா, 20 கிலோ 165 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில், 5 கேரளா லாட்டரி, சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.12,300, கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து ரூ.5500, மற்றும் 4 செல்போன், ஆவணங்கள் இல்லாத 6 பைக், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 46 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பிடிவாரண்ட் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 3 நாட்களில் 2058 கிலோ 72 கிராம் குட்கா, 30 கிலோ 285 கிராம் கஞ்சா, 36 கஞ்சா சாக்லேட், 208 போதை மாத்திரை, 1235 ஊசி, 35 மது பாட்டில், ஒரு கத்தி, 5 கேரளா லாட்டரி, ரூ. 63 ஆயிரத்து 300 மற்றும் 9 செல்போன், 7 பைக் 2 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 பேர் கைது செய்யப்பட்டனர். 10 பிடிவாரண்ட் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *