கோவையில் எப்எல் 2 பார்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
கோவை மாவட்ட எஸ்பி பவன் குமார் தலைமையில் எப்.எல் -2, எப்.எல்-3 மதுபானக் கூட உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட எப்.எல 2 மற்றும் எப்.எல் 3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:அனைத்து எப்.எல்-2 மற்றும் எப்.எல் -3 மதுபானக் கூட உரிமையாளர்களும் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள், அரசு விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பொறுப்புடன் செயல்பட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்கும். 21 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் எந்தச் சூழ்நிலையிலும் மதுபானம் வழங்கக்கூடாது.
| குறிப்பாக, வெளி மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர் அல்லாத நபர்கள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும் உறுப்பினர் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் முறையாகவும், புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் பராமரிக்கப்பட வேண்டும்.
மதுபானக் கூட வளாகத்திற்குள் அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சிறிய தகராறு, வாக்குவாதம், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை அல்லது வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மதுபானக் கூடத்தின் உட்புறம், வெளிப்புறம், நுழைவு மற்றும்
வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் முழுமையாகப் பதிவாகும் வகையில் சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை முறையாக செயல்படும் நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். சிசிவிடி பதிவுகள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.
சட்டப்பூர்வ தேவைக்காக காவல்துறையினர் கோரும் போது அவை வழங்கப்பட வேண்டும். உரிமம் பெற்ற வளாகத்திற்குள் அருந்துவதற்காக அனுமதிக்கப்பட்ட மதுபானங்களை எந்தச் சூழ்நிலையிலும் வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது.
மதுபான விற்பனை மற்றும் அருந்துதல் தொடர்பான அனைத்து உரிம நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
