வாகன உரிமை பெயர் மாற்றம் செய்யாவிட்டால் நடவடிக்கை : போலீசார் எச்சரிக்கை

கோவை மாநகரில் சொந்த பயன்பாட்டுக்காக பழைய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்குபவர்களிடையே உரிமை மாற்றம் செய்வதில் அலட்சியம் அதிகமாக உள்ளது. பெயர் மாற்றத்துக்காக ஆவணங்களை சமர்ப்பித்தல், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளால் ஏற்படும் அலைச்சலை தவிர்க்கும் நோக்கில் பலரும் இதனை தாமதப்படுத்துகின்றனர்.

அதேநேரத்தில், வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களில் ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் இத்தகைய அலட்சியம் குறைவாக காணப்படுகிறது. மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி ஒரு வாகனத்தை வாங்கியவர் குறிப்பிட்ட காலத்திற்குள், பொதுவாக 30 நாட்களுக்குள், தனது பெயரில் உரிமை மாற்றம் செய்ய வேண்டும்.

இதனை தாமதப்படுத்தாமல் உரிய நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் ஒருவர் பழைய வாகனத்தை வாங்கும்போது, வாகனத்தின் ஆர்.சி., இன்சூரன்ஸ் பியூசி சான்றிதழ், சாலை வரி நிலுவை, நிலுவையில் உள்ள அபராதங்கள் மற்றும் வாகனம் தொடர்பாக ஏதேனும் வழக்கு அல்லது தடைஉத்தரவு உள்ளதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

மேலும், வாகனத்தை வாங்கியவுடன் உரிமை மாற்றத்துக்கான ஆவணங்களை முறையாக சமர்ப்பித்து, உரிமை மாற்றம் பதிவுகளில் நிறைவடைந்துள்ளதையும் உறுதிசெய்து அதற்கான ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். உரிமை மாற்றம் செய்யாமல் வாகனம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் நிலையில், அந்த வாகனம் விபத்து அல்லது குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்டால்.

பதிவு ஆவணங்களில் உள்ள உரிமையாளருக்கும் பிரச்னை ஏற்படக்கூடும். குறிப்பாக, வாகனம் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், வாகனத்தின் பதிவு உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். வாகனத்தை வேறு நபரிடம் விற்றுவிட்டதாக கூறினாலும்,

ஆவணங்களில் உரிமை மாற்றம் செய்யப்படவில்லை என்றால் அந்த நபர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அவர் மீது வழக்கு பதிவுசெய்யவும் வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல், வாங்கியவர் வாகனத்தை பயன்படுத்தும்போது விபத்து ஏற்பட்டால் காப்பீடு இழப்பீடு மற்றும் சட்டப்பொறுப்பு தொடர்பாகவும் சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, வாகனத்தை விற்பனை செய்தவர்கள், வாகனத்தை ஒப்படைத்து விட்டதுடன் தங்களது பொறுப்பு முடிந்துவிட்டதாக கருதக்கூடாது. வாங்கியவர் பெயரில் உரிமை மாற்றம் நிறைவடைந்துள்ளதா? என்பதை உறுதிசெய்வதுடன், விற்பனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைக்கான ஆதாரங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

வெறும் வாய்மொழி ஒப்பந்தம் அல்லது விற்பனை ரசீதை மட்டும் நம்பி உரிமை மாற்றத்தை மேற்கொள்ளாமல் இருப்பது எதிர்காலத்தில் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, தேவையற்ற அலைச்சல், கட்டணம் என நினைத்து உரிமை மாற்றத்தை தாமதப்படுத்த வேண்டாம். மேலும் வாகன தனிக்கையில்போது பெயர் மாற்றம் செய்யப்படாத வாகனங்கள் கண்டுபிடிப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *