கோவை மாவட்டத்தில் 4500 கனிம லாரிகளுக்கு ஜிபிஎஸ்…!

கோவை மாவட்டத்தில் கனிம பொருட்கள் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பதில் சிக்கல் இருந்தது.

இதை தவிர்க்க, ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும் என கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை உத்தரவிட்டது. கடந்த மாதம் முழுவதும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் பொருத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

மாவட்ட அளவில் சுமார் 8 ஆயிரம் வாகனங்களில் கனிம பொருட்கள் சப்ளை பணியில் இருப்பதாக தெரிகிறது. இதில் இதுவரை 4500 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் என்ற புவியியல் தகவல் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது. ஜிபிஎஸ் அமைக்க இந்த மாதமும் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

கனிம பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் குறிப்பாக கிராவல் மண், எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி போல்டர் கற்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜிபிஎஸ் கட்டுப்பாட்டில் இயக்கப்படும். ஒவ்வொரு ஜிபிஎஸ் வாகனமும் குவாரியிலிருந்து சைட்டிற்கு எத்தனை முறை சென்று வந்தது இதன் எடை அளவு, கனிம பொருட்களுடன் வாகனங்கள் இயங்கிய தூரம் போன்றவற்றை கனிம வளத்துறை அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்தே கண்டறிய முடியும்.

கூடுதல் எடை, ராயல்டி, டிரிப் பிரச்னைக்கு ஜிபிஎஸ் கண்காணிப்பு திட்டம் தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அளவில் கனிம வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம் பணியில் கோவை முதன்மை இடத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த கருவி இல்லாத வாகனங்களில் கனிம பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என கனிம வளத்துறையினர் தெரிவித்தனர். ஜிபிஎஸ் கருவிகளை ஒன்றிய அரசின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவான பரிவாஹன் வெப்சைட் உடன் இணைத்து அதனை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கனிம வளத்துறையினர் கூறுகையில் “கோவை மாவட்டத்தில் கனிம பொருட்கள் முறையாக குவாரிகளில் இருந்து கட்டுமான பணி நடக்கும் இடங்களுக்கு கொண்டு செல்வதை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்ட அளவில் பவ்வேறு பகுதிகளில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, மாவட்ட எல்லை பகுதிகளில் செக்போஸ்ட்கள் அமைத்து வாகனங்களின் இயக்கத்தை கண்காணித்து வருகிறோம். கோவை மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்கிறது. மாநில எல்லை செக் போஸ்ட்களில் கனிம பொருட்கள் தடை மீறி செல்கிறதா? என கண்காணித்து வருகிறோம்.

கோவை மாவட்டத்தில் கனிம பொருட்களை முறையாக எடுத்து செல்ல வேண்டும். விதிமுறை மீறல் இருக்க கூடாது என சப்ளையர், குவாரி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓவர் லோடு வாகனங்கள் தொடர்பாக ஆய்வு நடக்கிறது.

அரசு திட்டங்கள் தொடர்பாக பணிகள் செய்பவர்கள் மட்டும் உரிய அனுமதி பெற்று குளம் குட்டை போன்றவற்றில் இருந்து கிராவல் மண் பெறலாம். இதற்கு உரிய ஆதாரங்கள் காட்டி அனுமதி பெற வேண்டும். முறைகேடாக கூடுதலாக மண் எடுக்க முடியாது. அரசு திட்ட அல்லாமல் வேறு பணிகளுக்கு குளம், குட்டைகளில் இருந்து கிராவல் மண் எடுக்க கூடாது” என்றனர்.

5 thoughts on “கோவை மாவட்டத்தில் 4500 கனிம லாரிகளுக்கு ஜிபிஎஸ்…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *