செந்நிறமாக மாறிய பில்லூர் குடிநீர்…

கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சமீபத்தில் மழை பெய்தது குறிப்பசு பவானி, பில்லூர் நீர் தேக்க பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குடிநீர் செந்நிறமாக மாறி விட்டது. குடிநீரை சுத்தம் செய்து தெளிவித்து சப்ளை செய்யாமல் கலங்கலாக அப்படி அனுப்புவதாக தெரிகிறது.

தினமும் 13 கோடி லிட்டர் பில்லூர் குடிநீர் கோவை நகர் புறநகருக்கு சப்ளையாகிறது. இந்த குடிநீரின் தரம் மோசமாக இருப்பதாக மக்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள். குடிநீர் சப்ளை, சுத்திகரிப்பு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தினர் அனுப்பும் குடிநீரை குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஆய்வக பரிசோதனை செய்து பார்த்த பின்னர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த நிறுவனத்தினர் தரமற்ற குடிநீர் அனுப்பினால் அதை குடிநீர் வாரியத்தினர் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாக தெரிகிறது.

குடிநீரில் போதுமான அளவு தாதுப்பொருட்கள் இருப்பதில்லை. தரம் குறைவான குடிநீரை தொடர்ந்து பயன்படுத்தும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும்,நோய் தாக்கம் அதிகமாகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதை தவிர்க்க குடி நீர் வடிகால் வாரியத்தின் சார்பில் படிகாரம், குளோரின் முறையாக கலந்து வினியோகிக்க வேண்டும்.

சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு போன்ற நீர் திட்டங்களில் இருந்து பிரதான குழாயில் சப்ளையாகும் குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டுள்ளதா, மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளின் மூலமாகவும், நில மட்ட நீர் தேக்க தொட்டிகளில் சேகரித்தும் சப்ளையாகும் குடிநீர் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். நோய் பரவலுக்கு குடி நீர் முக்கிய காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் பரிசோதனை ஆய்வகங்களில் நீர் மாதிரி சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். குடிநீரில் இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், குளோரின் அளவுகளை தினமும் கணக்கிடவும், பற்றாக்குறை தாதுப் பொருட்களின் அளவை சரியான அளவில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் சாக்கடை கால்வாய்களின் மீது அமைந்துள்ளது.

சாக்கடை நீர் குடிநீர் குழாய் மீது பாயும் நிலைமையும் இருக்கிறது. குழாய் பழுது ஏற்பட்டால் சாக்கடை நீர் குடிநீரில் கலக்கும் அபாயம் இருக்கிறது. இதையும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

2 thoughts on “செந்நிறமாக மாறிய பில்லூர் குடிநீர்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *