தீபாவளி கூட்டம் ஆம்னி பஸ்களில் கூடுதல் தொகை வசூல்…
கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் புகார்கள் குறித்து கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தீபாவளியொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்துறை கமிஷனர் உத்தரவின் பேரில், கோவை மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் தாமோதரன் அறிவுறுத்தலின் பேரில் 10 குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் கோவை மையம் தெற்கு வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என சுமார் 20 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், அதிகாலை 1 மணி முதல் 8 மணி வரையும், இரவு 8 மணி முதல் 12 மணி வரையும் காந்திபுரம், கொடிசியா, கணியூர் டோல்கேட், பொள்ளாச்சி, தாராபுரம் கே.ஜி.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, ஆம்னி பஸ்களில் சாலைவரி முறையாக செலுத்தப்பட்டு இருக்கிறதா? பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது 3 பஸ்களில் வரி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர்கள் உரிய வரியை செலுத்தியுள்ளனர். இது குறித்து ஆர்டிஓ அதிகாரிகள் கூறியதாவது: ஆம்னி பஸ்களில் சுழற்சி முறையில் சிறப்பு குழுக்கள் மூலமாக ஆய்வு நடத்தி வருகிறோம். டிக்கெட் புக்கிங் ஆப்களில் கூடுதல் கட்டணம் வசூல் குறித்தும் ஆய்வு செய்கிறோம். தவிர, எங்களுக்கு வரும் புகார்களின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராஜாபாளையம் செல்ல 2 பயணிகளிடம் கூடுதல் கட்டணம் ஆப் மூலமாக வசூல் செய்ததாக புகார் வந்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட பஸ் நிறுவனத்திடம் பேசி கூடுதல் கட்டணம் சரிசெய்யப்பட்டது. தற்போது வரை வேறு புகார்கள் எதுவும் வரவில்லை. ஆய்வின் போது சாலைவரி செலுத்தாமல் இருந்த 3 பஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் கட்டணத்தை செலுத்தினர் பொதுமக்கள் ஆம்னி பஸ்கள் தொடர்பான புகார்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலரை 93848-08302 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த சிறப்பு குழுவின் சோதனை வரும் 17ம் தேதி வரை மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஆய்னி பஸ்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க கூடாது. இதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.
