மினி லாரியில் கடத்திய 1.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…
கோவை பெரியகடை வீதி அருகே 1400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சிக்கிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பெரிய கடைவீதி பகுதியில் நேற்று இரவு பெரிய கடை வீதி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, உக்கடம் அன்பு நகர் பகுதியில் அதிவேகமாக வந்த ஒரு மினி லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
போலீசார் சோதனையிட வருவதை கண்டதும், அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மினி லாரியை அப்படியே நிறுத்திவிட்டு இருளில் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, போலீசார் அந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட 50 கிலோ எடை கொண்ட 28 மூட்டைகள் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக, ரேஷன் அரிசி மூட்டைகளுடன் மினி லாரியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பெரிய கடை வீதி போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தப்பியோடிய டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
