Coimbatore forest: கிராமங்களில் உலா வரும் யானைகள்
கோவை மாவட்டத்தில் யானைகள் வன எல்லை தாண்டி கிராமங்களுக்கு வருவது அதிகரித்து வருகிறது.
வன லேகாட்டத்தில், 450க்கும் மேற்பட்ட யானை வசிப்பதாக தெரியவந்துள்ளது. சில யானைகள் குடும்பத்தை பிரிந்து தனியாக சுற்றுவதாக தெரிகிறது. யானைகளின் நடவடிக்கை, செயல்பாடு அடிப்படையில் ‘கில்லர், கிராப் ரைடர், டேஞ்சர்’ என வகை பிரித்து அவற்றை அடக்கி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கரடிமடை, தாளியூர், கெம்பனூர், நரசீபுரம், மாங்கரை. பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுறை வட்டாரங்களில் இடம் பெயர்ந்து யானைகள் அதிகமாக வெளியே வருகின்றன.
நள்ளிரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் புகுந்து தண்ணீர் தொட்டியை தேடுவதும், வாகனங்களை தள்ளி விடுவதும் வீட்டின் காம்பவுண்ட் கேட் இடித்து தள்ளி விடுவது அடிக்கடி நடக்கிறது. வனத்தில் வறட்சியால் உணவு குறைந்து விட்டது. வன எல்லை கிராமங்களில் உணவு தேடி வரும் யானைகள் அங்கேயும் தண்ணீர் இன்றி வீட்டு குடியிருப்புகளில் பேரல், நீர் தொட்டிகளில் தண்ணீர் தேடுவதாக தெரியவந்துள்ளது. வன எல்லை கிராம வீடுகளில் கதவை திறந்து போடாதீர்கள், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரவு வெளியே செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்து வருகின்றனர்.
வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதம் அறுவடை காலமாக இருக்கிறது. சோளத்தின் வாசனை அறிந்து அதை தேடி யானைகள் வன எல்லை கிராமங்களுக்கு அதிகமாக வந்து செல்லும், அக்டோபர், செப்டம்பர் காலங்களில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வராது. ஆனால் வறட்சியால் நிலை தலை கீழாக மாறி விட்டது. இரவு நேரத்தில் வனத்திலிருந்து தினமும் 30 முதல் 40 யானைகள் கிராமங்களுக்கு வந்து செல்வதாக தெரிகிறது.
உணவு தேவை பூர்த்தியான பின்னர் தான் யானைகள் வனத்திற்குள் செல்கின்றன. பயிர்களை யானைகள் சாப்பிட்டு காலி செய்வதால் விவசாயிகள் கடும் விரக்தியில் புலம்பி வருகின்றனர். வறட்சி நிலை நீடித்தால் விவசாயம் செய்ய முடியாது இருக்கின்ற பயிர்களை யானைகளிடமிருந்து காப்பாற்ற முடியாது என விவசாயிகள் கூறினர்.
