கோவையில் குடிநீர் பஞ்சம் குடங்களுடன் மக்கள் தஞ்சம்

:கோவை மாவட்டத்தில் கோடையை விட கடும் வறட்சி நிலவுகிறது. மழை இல்லாத காரணத்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இதனால் குடி நீர் எடுப்பு வெகுவாக குறைக்கப்பட்டது. சிறுவாணி குடி நீர் வினியோகம் செய்யப்படும் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மாதம்பட்டி, தென்கரை, சென்னனூர், பேரூர் உட்பட பல்வேறு வழியோர கிராம பகுதிகளில் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இந்த பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் போர்வெல் மற்றும் மாற்று குடிநீர் திட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக கிராமங்களில் கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தக்கூடிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. தொண்டாமுத்தூர் பகுதி பொதுமக்கள் சிலர் பிரதான குழாய் அமைந்துள்ள பகுதியில் சிறுவாணி ஏர் வால்வு பகுதியில் வெளியேறும் கசிவு குடி நீரை பிடிப்பதற்காகவும் ரோட்டில் பொது குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் குடிப்பதற்காகவும் காத்திருக்கும் நிலைமை இருக்கிறது.

சிலர் டெம்போ மற்றும் லாரிகளை கொண்டு வந்து நிறுத்தி அதில் பேரல், குடங்களை வைத்து குடிநீர் பிடித்து நிரப்பி கிராமங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். இதுவரை இது போன்ற வறட்சி நிலை ஏற்பட்டதில்லை. இப்போதே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றால் வரும் கோடைகாலத்தில் நிலைமை என்னாகும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எப்போதும் வற்றாக பசுமை நிறைந்த தொண்டாமுத்தூர் பகுதியிலேயே இது போன்ற அவலநிலை இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பல கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த பகுதி மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக போர்வெல் குடிநீரை சப்ளை செய்யுமாறு கூறிவிட்டதாக தெரிகிறது. பொதுமக்கள் உப்பு தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், “எங்களுக்கு எப்போதுமே அதிக அளவு குடிநீர் கிடைக்க வந்தது, ஆனால் கடந்த மூன்று மாதமாக நிலைமை மாறிவிட்டது. கோடை காலத்தை விட வறட்சி அதிகமாக காணப்படுகிறது. சிறுவாணி அணையிலிருந்து எங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு 60 முதல் 70 சதவீதம் குறைக்கப்பட்டது. எங்களுக்கு ஒரு நபருக்கு தினமும் 10 முதல் 20 லிட்டர் குடிநீர் கூட கிடைக்கவில்லை. போர்வெல் தண்ணீர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கும் தண்ணீரை தான் நாங்கள் குடிநீராக பயன்படுத்த வேண்டி இருக்கிறது. தண்ணீர் உப்பாக இருப்பதால் நாங்கள் ஆர்ஓ மற்றும் பில்டர் வாங்கி குடிநீரை சுத்திகரித்து குடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். ” என்றனர்.

One thought on “கோவையில் குடிநீர் பஞ்சம் குடங்களுடன் மக்கள் தஞ்சம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *