நீரின்றி வறண்டது சித்திரை சாவடி அணை

கோவையில் நொய்யல் நீர் ஆதாரத்தில் முதல் தடுப்பணையாக சித்திரை சாவடி அணை உள்ளது. இந்த அணைப்பகுதியில் வறட்சி காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் கூட எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கும்.

தடுப்பணையின் நீர்மட்டம் 6.5 அடியாக இருக்கிறது. மணல் பகுதியாக இருந்தாலும் இந்த அளவுக்கு தண்ணீர் தேக்கம் இருக்கும். மேலும் கழிவு எதுவும் கலக்காமல் சுத்தமான மழை நீர் தேங்குவதால் இந்த தடுப்பணைக்கு தனி மவுசு உண்டு. சித்திரை சாவடி அணை வரலாற்று பெருமை கொண்டது. கோவை குற்றாலம், வெள்ளிங்கிரி, ஈஷா செல்லும் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் சிலர் இந்த அணையை பார்வையிட்டு செல்வது உண்டு.

உள்ளூர் மக்கள் எப்போதும் இங்கே வந்து தண்ணீரில் குளிப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாக சித்திரை சாவடி தடுப்பணை மழை இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. இந்த அணைக்கு செம்மேடு, சின்னாறு, பெரியாறு, கல் கொத்தி மலை, பத்திரகாளி அம்மன் கோயில் ஓடை என 30க்கும் மேற்பட்ட ஓடைகளின் மூலமாக தண்ணீர் வருகிறது. கூடுதுறை பகுதியில் கலந்து இந்த தண்ணீரக் நொய்யல் ஆறாக உருவாகி வருகிறது.

ஆற்றின் மையத்தில் அமைந்துள்ள சித்திரை சாவடி தடுப்பணை விவசாயிகளின் நீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. பாசன வாய்க்கால் மூலமாகவும், குள வாய்க்கால் மூலமாகவும் குளங்களுக்கு தண்ணீர் இங்கேயிருந்து பிரிந்து செல்கிறது. நொய்யல் ஆற்றில் பாயும் நீரின் அளவை குறைப்பது, பாசன வாய்க்காலில் நீரை திருப்பி விடுவது சித்திரை சாவடி அணையில் தான் மேற் கொள்ளப்படுகிறது.

அணை முற்றிலும் வறண்டு விட்டதால், இந்த பகுதி மணல் காடாக மாறி விட்டது.

இது தொடர்பாக அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், “எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி காணப்படுகிறது. தடுப்பணை வறட்சியால் இதனை சுற்றியுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நிலம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. சித்திரை சாவடி பாசன வாய்க்கால் திறக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக சித்தரை சாவடி அணை வறண்டதில்லை. | முதல் முறையாக அதுவும் மழை காலத்தில் வறண்டு கிடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஆரம்பத்தில் உள்ள முதல் அணைக்கே இந்த நிலைமை என்றால் பேரூர், வெள்ளலூர், சூலூர் போன்ற கீழ் பகுதி ஆற்றின் தடுப்பணைகள் மேலும் வறட்சியில் இருக்கிறது.

நொய்யல் பாசனத்தில் கடைமடை வரை நீர்பாசனம் இல்லாமல் போய் விட்டது. நிலத்தடி நீர் மட்டமும் பாதாளத்திற்கு போய் விட்டது. நொய்யல் பாசனத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. வரலாறு காணாத வறட்சியின் உச்சமாக நொய்யல் ஆறு, தடுப்பணைகள் மாறி விட்டது,” என்றனர்.

5 thoughts on “நீரின்றி வறண்டது சித்திரை சாவடி அணை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *