காலங்களைக் கடந்த அரசு கலைக் கல்லூரி…

திண்ணை பள்ளியில் மட்டுமே கல்வி என்றிருந்த கால கட்டம் அது. 1852ம் ஆண்டில் ஆங்கில மொழி பள்ளி அமைக்கப்பட்டது.

இந்த பள்ளியை நிறுவியவர் கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய இ.பி.தாமஸ். ஆரம்ப காலத்தில் இது தாமஸ் பள்ளி என அழைக்கப்பட்டது. கடந்த 1861ம் ஆண்டில் இது நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது. டி.ஜி.டேவிஸ் என்பவர் நடுநிலைப்பள்ளி தலைவராக பதவி வகித்தார். 1864-65ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக அந்தஸ்து பெற்றது.

1868ம் ஆண்டில் கல்லூரியாக மாறியது.இதற்கு கோவைக்கல்லூரி என பெயர் வைக்கப்பட்டது. அப்போது, பிளேனகன் என்பவர் முதல்வராக பொறுப்பு ஏற்றார். 1870ம் ஆண்டில் கலை தேர்வுகளுக்கு அனுமதி பெறப்பட்டது.கலை தேர்வில் 2 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 1913ம் ஆண்டு வரை பிரிட்டீஷ்காரர்களை இந்த கல்லூரியில் முதல்வர்களாக பணியாற்றி வந்தனர்.

1914ம் ஆண்டில் கே.எஸ்.வைத்தியநாத ஐயர் என்பவர் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றார்.

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இந்தியராக முதல்வர் பொறுப்பு வகித்த பெருமை வைத்தியநாத ஐயருக்கு உண்டு. கடந்த 1953ம் ஆண்டில் இந்த கல்லூரி நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. கடந்த 1982ம் ஆண்டில் பாரதியார் பல்கலைகழகத்தில் இணைந்த இந்த கல்லூரி, கடந்த 1987ம் ஆண்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

இதுவே கோவையின் முதல் தன்னாட்சி கல்லூரியாகும். 50 ஆண்டுகளுக்கு முன் கோவை, திருப்பூர், ஈரோடு, கொள்ளேகால், சத்தி, தாராபுரம், காங்கேயம், நாமக்கல் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு கோவைக்கல்லூரி தான் பட்ட படிப்பதற்கான இடம். 40 ஆண்டுகளுக்கு முன் கோவைக்கல்லூரி, கோவை அரசு கலைக்கல்லூரி என பெயர் பெற்றது.

பள்ளி, கல்லூரி என 170 ஆண்டை கடந்து பெருமை பெற்ற கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி இன்னும் காலத்தால் அழியாத கட்டடங்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

இயற்பியல், வேதியியல், வரலாறு, தமிழ் துறை மற்றும் நிர்வாக அலுவலக கட்டடங்கள் 100 ஆண்டை கடந்து விட்டன. உடற்பயிற்சி கூடமும், நூலகமும் 80 ஆண்டை எட்டி விட்டன. கருங்கல், சுண்ணாம்பு கரைசல் மூலமாக இந்த கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. மத்திய தபால் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், போத்தனூர் ரயில் நிலைய கட்டடம் உருவாகும் முன்பே கல்லூரி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பட்டதாரிகளையும், ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களை உருவாக்கிய பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு. கோவை மண்டலத்தின் முதல் பட்டதாரியான கிருஷ்ணன் ஐயர் கோவைக்கல்லூரியில் 1871ம் ஆண்டில் படித்தார். சுதந்திர காலத்திற்கு பின்னர், இந்த கல்லூரியில் 46 முதல்வர்கள் பணியாற்றியுள்ளனர்.

சுதந்திர போராட்டத்தின் எழுச்சி பேச்சுக்களும், கிளர்ச்சிகளும் இந்த கல்லூரியில் அரங்கேறியுள்ளது. 1937ம் ஆண்டு கால கட்டத்தில் கல்லூரியை மூடி மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். நாட்டில் எந்த மூலையில் எங்கே பிரச்னை நடந்தாலும் அதன் தாக்கம் அரசுக்கலைக்கல்லூரி எதிரொலிக்கும். உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல் என இன்றளவும் மாணவர்களின் போராட்டம் ஒயவில்லை.

கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், “பாரம்பரியம் மிக்க வரலாற்று பொக்கிஷமான கல்லூரியில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. பிரிட்டீஷ் கால கட்டடங்களை இடிக்காமல் பராமரித்து சிறப்பான பயன்படுத்தி வருகிறோம், ” என்றனர்.

One thought on “காலங்களைக் கடந்த அரசு கலைக் கல்லூரி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *