மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாம் நடத்த விவசாயிகள் எதிர்ப்பு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது இது கலெக்டர் பவன் குமார், வருவாய் அலுவலர் சுரேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலவச மனை பட்டா கேட்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிகளவு கோரிக்கை மனு அளித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஸ்டெர்லைட் துப்பாக்கி குடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், “மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் பாதுகாப்பு முகாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்த காலத்தில் நடத்தப்பட்டது. தற்போது அங்கே யானைகள் முகாம் நடத்துவது தொடர்பாக தகவல் வந்துள்ளது. இங்கே இனி முகாம் நடத்த கூடாது. இங்கே காட்டு யானைகள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இங்கே முகாம் நடத்தினால் பல்வேறு பாதிப்பு ஏற்படும். யானைகள் கூட்டமாக வந்தால் விவசாய நிலங்கள் நாசமாகி விடும். மனிதர்கள் யானை தாக்கி
இறந்து போகும் அபாயம் இருக்கிறது. எனவே யானைகள் முகாம் நடத்த கூடாது.”என தெரிவித்தனர்.
மேலும் சிறுமுகை, லிங்காபுரம் பகுதியில்
2 மாதமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்தி வந்தோம். அந்த பகுதியில் வன விலங்கு பிரச்னை, யானைகள் கணக்கெடுப்பு பணி நடப்பதால், வண்டல் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கே மண் எடுக்க அனுமதி தேவை, ” என தெரிவித்தனர்.
சிங்காநல்லூர் ஆர்விஎஸ் காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி, அமராவதி உள்ளிட்ட அந்த பகுதி மக்கள் அளித்த மனுவில், “இந்த பகுதியில் தங்களுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. தாசில்தாரிடம் சான்று வர சொல்கிறார்கள். தாசில்தார் சான்று தர மறுத்து விட்டார். பல ஆண்டாக இருட்டு விட்டு கெரசின் விளக்கில் குழந்தைகள் படிக்க வேண்டியுள்ளது.
சில நேரங்களில் தெரு விளக்கில் மாணவர்கள் படிக்கிறார்கள். எங்களுக்கு பல்வேறு காரணங்களை சொல்லி மின் இணைப்பு வழங்கவில்லை, என்றனர். இடையர்பாளையம் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த 14 வயதான பள்ளி மாணவர் அளித்த மனுவில், “தான் கணுவாய் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிப்பதாகவும் ஆதார் கார்டு இல்லை, பிறப்பு சான்றில் க்யூ ஆர் கோட் பதிவு செய்யவில்லை எனக்கூறி ஆதார் கார்டு தர மறுத்து விட்டார்கள்.
இதனால் நான் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத முடியாத நிலை இருக்கிறது. ஆதார் கார்டு இல்லாவிட்டால் என் வாழ்க்கை போய் விடும். அதிகாரிகள் என் பிறப்பு சான்று வைத்து ஆதார் கார்டு தர வேண்டும், என்றார்.
சோமனூர் பகுதியை சேர்ந்த சகுந்தலா (60) என்பவர் அளித்த மனுவில், ” என் நிலத்தின் சில பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் திட்ட பணிக்காக எடுத்து கொண்டனர். பணி முடிந்த பின்னர் மீதமுள்ள என் நிலத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தேன். ஆனால் பட்டா தர 27 ஆண்டாக கால தாமதம் செய்து வருகிறார்கள். இதனால் என நிலத்தை வாரிசுகளுக்கு நான் தர முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள், ” என்றார்.
கோணவாய்க்கால் பாளையம் பகுதி ரவிச்சந்திரன் (65) அளித்த மனுவில், ” நான் மில்லில் வேலை செய்தேன். அதில் கிடைத்த பணம் 1.50 லட்ச ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்திருந்தேன். என் மனைவி, மகன் இருவரும் என பணத்தை வாங்கி கொண்டு அடித்து விரட்டி விட்டார்கள். நான் சாப்பாட்டுக்கு வழியின்றி ரோட்டிற்கு வந்து விட்டேன். என்னை மோசடியாக ஏமாற்றி தாக்கிய என் மனைவி, மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் பணத்தை மீட்டு தர வேண்டும், “என தெரிவித்திருந்தார்.
