அப்பா வேறொரு பொண்ணோட போயிட்டாரு… உதவி கேட்டு மகள்கள் கலெக்டர் ஆபீசில் கதறல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் நுழைவாயில் மற்றும் கலெக்டர் அலுவலக பிரிவில் இரண்டு புகார் மனு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் கடந்த இரு வாரத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார் மனுக்கள் குவிக்கப்பட்டுள்ளது.

குறைதீர்க்கும் முகாம் நடக்கும் என்ற நம்பிக்கையில் இன்று பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 700 க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து புகார் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

இலவச மனை பட்டா மற்றும் இலவச வீடு கட்டும் நூற்றுக்கணக்கான பெண்கள் வந்திருந்தனர்.

அன்னூர் குப்பனூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் தனது மகன் 37 சென்ட் இடத்தை தன்னிடமிருந்து தான செட்டில்மெண்ட் மூலம் வாங்கிக் கொண்டார். சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த இடம் பெற்ற பின்னர் அவர் எனது உணவு தேவைக்கு கூட பணம் தருவதில்லை.

எந்த ஆதாரமும் இல்லாமல் வறுமை நிலைமையில் இருக்கிறேன். எனக்கு சொந்தமான இடத்தை தான செட்டில்மெண்ட் ரத்து செய்து மீண்டும் எனது பெயருக்கு மாற்றி தர வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உதவி செய்ய வேண்டும் என கேட்டு கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.

இதேபோல் பொள்ளாச்சியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் தங்களது தந்தை குடும்பத்தைப் பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருகிறார். எங்களை கவனிப்பதில்லை. குடும்ப செலவுக்கு பணம் தருவதில்லை. எங்களின் உணவு தேவைக்கு கூட அவர் உதவி செய்வதில்லை. இதனால் நாங்கள் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறோம்.

பள்ளி படிப்பை படிக்க முடியாமல் இருக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் போலீசார் மூலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கதறியபடி புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் புகார் மனு பெறாத நிலையில் அந்த சிறுமிகள் இருவரும் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

முன்னதாக சிறுமிகள் கூறுகையில், “நாங்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தோம். போலீசார் தேர்தல் வேலை இருக்கிறது வரமுடியாது என கூறிவிட்டார்கள். எங்கள் பிரச்சினையை வேறு யாரிடம் சொல்ல முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம், எங்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. ” என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *