ஓட்டு மெஷின்களை பத்திரமா கொண்டு போகணும்.. கோவையில் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு

கோவை ஆர்.எஸ் புரம் மாநகராட்சி கலை அரங்கத்தில் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று நடந்தது.

இதில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் 366 மண்டல தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பயிற்சியின் போது அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும் 10 முதல் 15 ஓட்டு சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எந்த ஓட்டு சாவடிகள் யார் கட்டுபாட்டில் வரும் எந்த தொகுதி என பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த ஓட்டு சாவடிகளுக்கு தேர்தல் பொருட்கள் ஒட்டு மெஷின்கள், கட்டுப்பாட்டு கருவிகள் போன்றவற்றை கொண்டு சென்று ஒப்படைக்கும் பொறுப்பு உள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக 19,521 ஓட்டு மெசின்கள் இருக்கிறது. இவற்றை அந்தந்த ஒட்டு சாவடிகளுக்கு சரியான முறையில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

ஓட்டு சாவடிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மண்டல அலுவலர்கள் உடனடியாக செய்து தர வேண்டும். ஒட்டு மெஷின் பழுது அடைந்திருந்தால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக தொழில்நுட்ப குழுவினருக்கு தெரிவித்து சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இல்லாவிட்டால் மாற்று ஒட்டு மெஷின் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். ஓட்டு சாவடிகளுக்கு முழு பொறுப்பும் மண்டல அலுவலர்கள் தான் ஏற்க வேண்டும்.

ஒட்டு சாவடிகளில் எந்த குளறுபடியும் இருக்கக்கூடாது. வெப் காஸ்டிங் சரியான முறையில் இருக்க வேண்டும். செல்போன் டெபாசிட் பிரிவு அமைக்க வேண்டும். ஒட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு முடிந்து பாதுகாப்பாக ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

தேர்தலுக்கு தேவையான பொருட்களை குறிப்பாக அழியாத மை, ஸ்டேஷனரி பொருட்கள் தளவாடங்களை முறையாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.எந்த பொருட்களும் விடுபடக்கூடாது. ஆவணங்களை முறையாக கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். ஓட்டுப்பதிவு முறையாக நடக்கிறதா என கண்காணிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *