கோவையில் திருடர்களுக்கு பயந்து 247 கிராம் தங்க நகைகளை பேக்கில் கொண்டு வந்த போது மடக்கி பிடித்த பறக்கும் படை…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர் .

மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் இன்று வரை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும்.

இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகை, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் கோவை ரயில் நிலையம் முன் நடந்த சோதனையில் கணவர் மனைவி வைத்திருந்த பேக்கை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

பேக்கில் 35 லட்ச ரூபாய் மதிப்பிலான 257 கிராம் எடையிலான தங்க நகைகள் இருந்தது. இதை பார்த்த அதிகாரிகள் உடனடியாக அதை பறிமுதல் செய்தனர். அப்போது அவர்கள், இந்த நகைகள் நாங்கள் நீண்ட காலம் பயன்படுத்தி வந்த நகைகள். இவற்றை சென்னையில் இருந்து கொண்டு வருகிறோம்.

கழுத்தில் அணிந்து செல்ல தயக்கமாக, பயமாக இருந்தது. இந்த நகையுடன் சென்றால் திருடர்கள் திருடி சென்று விடுவார்கள் என பயத்தில் பேக்கில் வைத்து இரவு முழுவதும் தூங்காமல் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தோம். இந்த நகைகளை பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என நினைத்தோம்.

ஆனால் இதை ஓட்டுக்காக பரிசு பொருளாக வழங்குவதற்கு கடத்தி செல்வதாக நீங்கள் மடக்கி பிடிப்பது சரியல்ல எனக்கூறி புலம்பினர். இருப்பினும் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் வைத்து விசாரணை செய்து பின்னர் உரிய ஆதாரம் வாங்கி அனுப்பி வைத்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது சூலூரில் வந்த சரக்கு வாகனத்தை வணிக வரி அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் 28 லட்ச ரூபாய் மதிப்பிலான 19 டன் எடையிலான சில்வர் சாப்பாடு பிளேட் இருந்தது. இதை சூலூர் தேர்தல் பிரிவில் ஒப்படைத்தனர். விசாரணையில் கடைக்கு விற்பனைக்கு ஆர்டரின் பேரில் அனுப்பியது என தெரிவித்தார்கள்.

ரசீது காட்டினால் தான் விடுவோம் என அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொண்டாமுத்தூர் பறக்கும் படையினர் சோதனை செய்து வியாபாரத்திற்கு கொண்டு சென்ற 6 லட்ச ரூபாய் மதிப்பிலான 142 பண்டல் சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இன்று ஒரே நாளில் 77.30 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பொருட்கள், தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *