கோவையில் வரும் 12ம் தேதி முதல் தபால் ஓட்டு போடலாம்…
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என நாளை மதியம் 3 மணிக்கு தெரிந்து விடும்.
இதற்கு பின்னர், சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) தயார் செய்ய அனுமதி வழங்கப்படும். நாளை (10ம் தேதி) முதல் பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி நடத்தப்படும்.
அரசு அச்சகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 3563 ஓட்டு சாவடிகளுக்கு ஓட்டு மெசின்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேலட் பேப்பர் அச்சடிக்கப்படும். 10 சதவீதம் பேப்பர் ரிசர்வ் நிலையில் இருக்கும். இந்த பேப்பர் அச்சடித்து அனைத்து ஓட்டு மெசின்களிலும் முறையாக பொருத்தப்படும்.
அதன் பின்னர், அந்த ஓட்டு மெசின்கள் பாதுகாப்பாக ஸ்டிராங்க் ரூம்களில் வைக்கப்படும். இதேபோல் தபால் ஓட்டு போடுபவர்களுக்காக தபால் ஓட்டு சீட்டு தயார் செய்யப்படும். வேட்பாளர்களின் பெயர், சின்னத்துடன் இந்த சீட்டு அச்சடிக்கப்படும்.
இந்த பணியும் நாளை துவக்கப்படும். ஒரிரு நாளில் இந்த பணி முடியும். பின்னர் தபால் ஓட்டு சீட்டு நேரடியாக அரசு அலுவலர்கள், மாற்று திறனாளிகள், 85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்படும். மாவட்ட அளவில் சுமார் 50 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட தகுதியான நிலையில் இருப்பதாக தெரிகிறது.
இவர்களில் விருப்பம் உள்ளவர்கள், தபால் ஒட்டு விண்ணப்பம் பூர்த்தி செய்து தந்தவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போட முடியும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
