85 வயசு ஆயிடுச்சா…12ம் தேதியிலிருந்து நீங்க ஓட்டு போடலாம்…
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் படி மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டு பதிவு நடைபெறும் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், அவர்கள் வரிசையில் நின்றிருக்கும் நிலையில் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
வாக்காளர்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தந்து, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல், ஆணையம் அங்கீகரித்த 12 வகையான மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டு வந்து ஓட்டு போடலாம்.
நேரில் வாக்களிக்க இயலாத வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தே வாக்கு செலுத்தும் வசதி மற்றும் அஞ்சல் வாக்கு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தபால் ஓட்டு போடலாம். நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவமான 12ஐ உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்தவர்களுக்கு தபால் ஓட்டு சீட்டு வழங்கி வாய்ப்பளிக்கப்படும்.
85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வீடு தேடி சென்று வாக்கு பதிவு செய்யும் முறையில் மேற்கொள்ளப்படும். இந்நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறும்.
கோவை மாவட்டத்தில் 20,586 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மேட்டுப்பாளையம் தொகுதியில் 2061 வாக்காளர்கள், சூலூரில் 2027 வாக்காளர்கள், கவுண்டம்பாளையத்தில் 2818 வாக்காளர்கள், கோவை வடக்கில் 2679 வாக்காளர்கள், தொண்டாமுத்தூரில் 2187 வாக்காளர்கள்,
கோவை தெற்கில் 1702 வாக்காளர்கள், சிங்காநல்லூரில் 2233 வாக்காளர்கள், கிணத்துக்கடவில் 2135 வாக்காளர்கள், பொள்ளாச்சியில் 1716 வாக்காளர்கள், வால்பாறையில் 1028 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேல் இருக்கிறார்கள். இவர்கள் தபால் ஓட்டு போட்ட வாய்ப்பு தரப்படும்.
இதேபோல் மாவட்ட அளவில் 45 வயதிற்கு மேற்பட்ட மாற்று திறனாளி வாக்காளர்களாக 15,654 பேர் உள்ளனர். இவர்களும் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வரும் 12ம் தேதி முதல் இவர்களுக்கு தபால் ஓட்டு சீட்டு வழங்கி ஓட்டு பதிவு செய்யப்படும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் தபால் ஓட்டு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
