கோவை சிறையில் கைதி தற்கொலை முயற்சி…
கோவை சூலூர் சின்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (25).
இவர், கடந்த 2025ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் 22-வது பிளாக்கில், 10-வது அறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில், ஜீவானந்தம் கழிவறையின் பின்புறம் உள்ள இரும்பு கம்பியில் தனது லுங்கியைப் பயன்படுத்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் சத்தம்போட்டு போலீசாரை அழைத்தனர். அவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறை போலீசார், தற்கொலைக்கு முயன்ற ஜீவானந்தத்தை மீட்டு, உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் திருமலை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
