கோவை மாவட்டத்தில் ‘ஆதிதிராவிடர் காலனி’ என ரசீது வழங்கிய அதிகாரிக்கு நோட்டீஸ்…!
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட வடவள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி என்று குடிநீர் கட்டண ரசீது வழங்கியுள்ளது . வடவள்ளி செயல் அலுவலர் குடிநீர் கட்டணம் செலுத்திய பொதுமக்களுக்கு 23.03.2026 தேதியில் ரசீது வழங்கியுள்ளார்.
அதில் வேலப்பநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி என்று குறிப்பிட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் வரப்பெற்ற தகவலின் பேரில், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல ஆணையம் தாமே முன் வந்து இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
அரசாணை (நிலை) எண்.313 படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள்,
இன்னபிற மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள், காலனி போன்ற வார்த்தைகளை நீக்குவதற்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள், நகராட்சி பேரூராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் இருக்கும் காலனி என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தும்,
அந்த அரசு ஆணையை நடைமுறைபடுத்த வேண்டிய நிலையில் இருக்கும் வடவள்ளி ஊராட்சி நிர்வாகம், மேற்படி ஆணையை புறக்கணிக்கும் வகையில் காலனி என்ற சொல்லை பயன்படுத்தி ரசீது வழங்கிது ஏற்புடையதன்று. எனவே, காலனி என்ற சொல்லை ரசீதில் குறிப்பிட்டு வழங்கிய அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது.
அவ்வாறு எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை விவரங்களுடனும், வடவள்ளி ஊராட்சியில் காலனி என்ற சொல்லை நீக்கி, அது தொடர்பான விவரங்களுடனும், ஒரு விரிவான அறிக்கையை 05.05.2026 ம் தேதிக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோவை மாவட்ட கலெக்டருக்கு ஆணையம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
