கோவையில் 20 கிலோ தங்க கட்டியை தடையின்றி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள்…!
கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அதனை சோதனை செய்து பார்த்தபோது தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் பாதுகாப்புடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் பிரிவிற்கு அனுப்பி வைத்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் வாகனத்தில் இருந்த தங்கம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது . இதை தொடர்ந்து அரை மணி நேரத்தில் தங்கத்துடன் அந்த வாகனத்தை தடையின்றி அனுப்பி வைத்தனர்.
வாகனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 20 கிலோ எடையில் தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது . இந்த தங்க கட்டிகளை ஆபரணமாக வடிவமைக்க மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு சென்ற போது பிடிபட்டதாக கூறப்படுகிறது.
வாகனத்தில் தங்கக் கட்டிகளுக்கான ஆவணங்கள் இருந்ததாகவும் அதை பார்த்து உடனடியாக எந்த விசாரணையும் செய்யாமல் விட்டு விட்டதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் தேர்தல் பிரிவின் பறிமுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாமல் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான குறிப்பாக மருத்துவ தேவைகளுக்கான பணத்தை தேர்தல் பிரிவினர் உடனடியாக ஒப்படைக்காமல் பல நாட்கள் காத்திருக்க வைக்கின்றனர்.
சில நேரங்களில் பணத்தை ஒப்படைக்க மறுத்து விடுகிறார்கள். ஆதாரங்களை காட்டினாலும் பணம் ஒப்படைக்க பல்வேறு சிக்கல்கள் ஏற்படுத்தப்படுகிறது. தேர்தல் பிரிவின் இந்த நடவடிக்கை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் பிரிவினர் சாதாரண மக்கள் பணத்தை பறிமுதல் செய்வதில் மிகக் கடுமையாக நடந்து கொள்வதாகவும் அரசியல் கட்சியினர் மற்றும் தொழில்துறை வட்டாரத்தில் சுமுகமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
