கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே

கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இருக்கிறது.

இதில் 161 கல் குவாரிகள் இயக்க நிலையில் இருப்பதாகவும் சில கல் குவாரிகள் முறையாக இயக்கப்படாமல் லைசென்ஸ் புதுப்பிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இயங்கும் நிலையில் உள்ள சில குவாரிகளில் அதிகளவு கனிமங்கள் வெட்டி உரிய ராயல்டி தராமல் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் கல் குவாரிகள் தொடர்பாக விரைவில் டிரோன் சர்வே நடத்த கனிம வளத்துறை அமைச்சர் உத்தரவு வழங்கியுள்ளார். இதன்படி மாவட்ட அளவில் டிரோன் சர்வே நடத்தப்படும். இந்த சர்வே மூலமாக கல் குவாரிகளில் கல், கிராவல் எடுக்கும் அளவு, குவாரிகளின் அளவு, குவாரிகளை ஒட்டியுள்ள அரசு, வனம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த நிலங்களை அடையாளம் காண முடியும்.

கடந்த காலங்களில் புவியியல் தகவல் அடிப்படையிலான எல்லை (டிஜிபிஎஸ்) சர்வே பணி நடத்தப்பட்டது. சாட்டிலைட் மூலமாக நடந்த இந்த சர்வேயில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட அளவில் பரவலாக இந்த சர்வே நடத்தப்படவில்லை. சுமார் 12 குவாரிகளில் மட்டுமே இந்த சர்வே நடத்தப்பட்டது.

கல் குவாரிகளில் வசூல் வேட்டை நடத்துவதற்கு குவாரி நிர்வாகத்தினரை மிரட்டும் வகையில் இந்த சர்வே நடத்தப்பட்டதாகவும், அதற்கு பின்னர் குவாரிகள் நடத்துவோர் போராட்டத்தில் குதித்து விட்டதால் கடும் நெருக்கடி குறைந்தது. மேலும் கனிம பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதால், கட்டுமான தொழில் செய்பவர்கள் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தவெக அரசு மீண்டும் குவாரிகாரர்களை ஒருங்கிணைத்து முறைப்படுத்தவும் கனியம் கடத்தல் தடுக்கவும் டிரோன் சர்வே திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சர்வே செய்ய பல லட்ச ரூபாய் செலவாகும். இந்த சர்வே மூலமாக கடந்த காலங்களில் கனிமங்கள் எடுப்பதில் முறைகேடு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் முறைகேடாக அதிக ஆழத்தில் இயங்கும் கல் குவாரிகளை மூடவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல் குவாரிகளில் சர்வே நடத்துவதோடு வெளி மாநிலங்களுக்கு முறைகேடாக அதிகளவு கனிமம் கடத்துவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *