கோவை அம்மா உணவகத்தில் கலெக்டர் ஆய்வு…
கோவை மசக்காளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மசக்காளிப்பாளையம் அம்மா உணவகம், மைலம்பட்டி நியாய விலைக்கடையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று
ஆய்வு செய்தார். இதில் சூலூர் வட்டாட்சியர் திரு.செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, கணேசமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர். மசக்காளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை வசதிகள், மாணவர்களின் வருகைப்பதிவு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட
அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தில் உணவின் தரம், சுகாதார வசதிகள், உணவுப் |பொருட்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு சுத்தமான மற்றும் தரமான உணவு தொடர்ந்து வழங்க வேண்டும் என துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மைலம்பட்டியில் செயல்பட்டுவரும் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், மண்ணெண்ணெய் விநியோக முறையையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வேதியியல் ஆய்வகம் மற்றும் கணிப்பொறி ஆய்வகம் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
