கோவை மாவட்டத்தில் தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடுகள் தீவிரம்…!
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உரிய படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளது
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
சட்ட மன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் எந்தெந்த சட்ட மன்ற தொகுதிக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. அரசு விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. அலுவலக நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிவதை தடுக்க முன்னதாக இணையதளம் மூலம் வேட்பு மனு தாக்கல் குறித்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
மனு தாக்கல் செய்பவர்களுக்காக இந்த அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் படிவங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. மனு தாக்கல் படிவங்களை பெற்று சென்று பூர்த்தி செய்து முறைப்படி தரலாம். சந்தேகம் இருந்தால் அதனை தேர்தல் பிரிவினரிடம் கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு தாக்கல் நாட்கள் நெருங்கி வருவதால் கேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது .
100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது. மனு தாக்கல் செய்பவர், முன் மொழிபவர், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களுடன் மட்டும் செல்ல வேண்டும். வாகனங்களில் கூட்டமாக செல்ல கூடாது பட்டாசு வெடிக்க கூடாது, மேளதாளம் கூடாது, கட்சி சின்னம், கொடி இருக்க கூடாது.
கோஷம் போடக்கூடாது. தொண்டர்களை அழைத்து வரக்கூடாது ஒருவர் அதிகபட்சமாக 4 வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அபிடவிட் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும். வைப்பு தொகை அதற்கு உரிய பிரிவு வகையில் செலுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறக்கூடாது என நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
