கோவை மாவட்டத்தில் 29 பூஜ்ஜிய ஓட்டு சாவடிகள்…!
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 26, 98,813 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 13,00,889 பேர் பெண் வாக்காளர்கள் 13,95,396 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 528 பேர் உள்ளனர், மாவட்ட அளவில், கடந்த காலங்களில் 3117 ஒட்டு சாவடிகள் இருந்தது. இந்த நிலையில் எஸ்ஐ.ஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் நடத்தப்பட்டது.
இதன் மூலமாக மாவட்ட அளவில் சுமார் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 33 லட்சத்திற்கும் மேல் இருந்த வாக்காளர்கள் வெகுவாக குறைந்த நிலையிலும், ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. ஆனால் ஓட்டு சாவடி மறு சீரமைப்பு என்ற கிட்டம் கொண்டு வரப்பட்டது. எந்த ஓட்டு சாவடியிலும் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க கூடாது.
அதிக வாக்காளர்கள் இருந்தால் அதனை பிரித்து புதிய ஓட்டு சாவடி அமைக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவு வழங்கியது. இதன் அடிப்படையில் மறு சீரமைப்பு பின்னர் 446 ஓட்டு சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலமாக ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை 3563 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியான பின்னர் 8 துணை ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு பெறப்பட்டது. இதன் மூலமாக மொத்த ஓட்டு சாவடிகள் எண்ணிக்கை 3571 என மேலும் அதிகரித்தது. கடந்த காலங்களில் 398 பதட்டமான ஓட்டு சாவடிகள் இருந்தது.
இந்த பதட்ட (சென்சிடிவ்) ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 182 என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், ” மாவட்ட அளவில் கூடுதலாக ஓட்டு சாவடிகள் இருக்கிறது. நாங்கள் ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கையை பழைய அளவை விட மேலும் குறைக்க வேண்டும் என தெரிவித்தோம்.
நீங்கள் சொன்னபடி கூடுதல் ஓட்டு சாவடிகளுக்கு பயிற்சி பெற்ற பூத் ஏஜன்டை எங்களால் உருவாக்க முடியாது. திடீரென 446 பூத் ஏஜன்ட் மற்றும் 8 துணை ஓட்டு சாவடி ஏஜன்டுகளை புதிதாக நாங்கள் எப்படி தயார் செய்ய முடியும், என தேர்தல் பிரிவில் தெரிவித்து விட்டனர்.
ஒட்டு சாவடிகளை குறைக்காவிட்டால் எங்களின் ஒத்துழைப்பு சரியாக இருக்காது என கூறி விட்டனர். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவினர், தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஓட்டு சாவடிகள் எண்ணிக்கை குறைக்க இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடும் எதிர்ப்பை சமாளிக்க மாவட்ட அளவில் 29 ஓட்டு சாவடிகளை இயக்கம் இல்லாமல் வெறும் ஒட்டு சாவடியாக (பூஜ்ஜியம்) என்ற அளவில் வைத்திருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒட்டு சாவடி அலுவலர்கள் யாரும் நியமனம் செய்யப்படமாட்டார்கள். இந்த புதிய முடிவு தேர்தல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
