பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேர் பழுது: தேரோட்டம் நடத்துவதில் சிக்கல்…!
தமிழகத்தின் காசி என்ற பெருமையைக் கொண்டது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். பிறவா பனை இரவா புளி, எலும்பு கல்லாவது, புழுக்காத சாணம், வலது காது மேல்நோக்கி இருப்பது
போன்ற ஐந்து அதிசயங்கள் கொண்டது இந்த கோவில்.
இந்தக் கோயிலில் வழிபாடு செய்பவர்கள் பிறவி பயன் பெறுவார்கள் என்று ஐதீகம் உண்டு.
இறந்தோருக்கு சடங்கு செய்ய பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கே வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
2000 ஆண்டுகளுக்கு முன் கரிகால சோழனால் உருவாக்கப்பட்ட இந்த கோயிலில் நீண்ட காலமாக தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் நூறாண்டு பழமையான தேர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தேர் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக தெரிகிறது. இதனை சரி செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உத்தரவு வழங்கப்பட்டது.
இதில் பழைய தேர் சீரமைத்து புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் இந்த உத்தரவின் படி பழைய தேர் சீரமைப்பு செய்யப்படவில்லை. வரும் 29ம் தேதி பேரூர் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது
ஆனால் தேரோட்டம் நடத்த முடியாது என கோயில் நிர்வாகம் அறிவித்துவிட்டது. இது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காலம் காலமாக தேரோட்டம் நடந்து வரும் கோவிலில் வழக்கம் போல் தேரோட்டம் நடத்தியே ஆக வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது .
இதைத் தொடர்ந்து கோவிலில் சுவாமி வலம் வரும் சப்பரத்தில் வைத்து திருவீதி உலா போல் தேரோட்டம் நடத்தி விடலாம் என கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து வரும் 29ம் தேதி சப்பரத்தின் மூலமாக தேரோட்டம் நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
பிரம்மாண்டமாக நடக்கும் தேரோட்டத்தை காண பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம். பெருமை பெற்ற இந்த கோவிலில் தேர் பழுது காரணமாக விமர்சையாக தேரோட்டம் நடத்த முடியாத சூழல் உருவானது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது.
