வடவள்ளி பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு…


தீபாவளிப் பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச வசூலைத் தடுக்கும் நோக்கில், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகத்திற்குப் பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், துடியலூர், பிளிச்சி, வீரபாண்டி, கூடலூர், குருடம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் பத்திரப்பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கச் சான்று மற்றும் பத்திர நகல் பெறுதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலருக்கு இங்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பிரபுதாஸ், எழிலரசி தலைமையில் சுமார் 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸ் குழுவினர் இன்று மதியம் 3 மணியளவில் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் இறங்கினர்.

இதேபோல, கோவையின் மற்றொரு முக்கியப் பகுதியான வடவள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையைத் தொடங்கினர்.
தீபாவளிப் பண்டிகை வசூல் மற்றும் முறைகேடான லஞ்சப் பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறியவே மேற்கண்ட இரு இடங்களிலும் இந்தத் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகரன் தெரிவித்தனர்.

மேலும், சோதனையின் போது பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக, “அரசு அலுவலகங்களில் லஞ்சமா? உடனே புகாரை வாட்ஸ்அப்பில் அனுப்பவும்” என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு சுவரொட்டிகளையும் போலீசார் ஒட்டினர். மதியம் 3 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த அதிரடி சோதனை இரவு 8.30 மணி அளவில் முடிவடைந்தது. இந்த சோதனையில் வடவள்ளியில் ரூ 25,000 ரொக்கம் மற்றும் ஜி பேவில் ரூ 6 லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது அதேபோல பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.15,000 கைப்பற்றப்பட்டது. இந்த சோதனையால் பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *